Monday, January 8, 2018

இந்தியாவில் அசாதாரண சூழல்...போராடும் சக்திகளுடன் இணையுங்கள்: பஹ்ரைனில் இந்தியர்களிடம் ராகுல் காந்தி


 இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; வெறுப்பரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள் என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் தலைவரான பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக பஹ்ரைன் சென்றுள்ளார் ராகுல் காந்தி. பஹ்ரைன் அரசு விருந்தினராக சென்றுள்ள ராகுல் காந்தி அந்நாட்டு பட்டத்து இளவரசரை சந்தித்தார். பின்னர் பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அம்மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது: உங்களது நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். அதேநேரத்தில் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வில் நீங்களும் பங்கு வகிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவானதாக இருக்கிறது., வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குதலில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலையும் பிரிவினையையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு போராடுகிறோம்; ஜாதி மத பேதங்கள் இல்லாமல் மக்களை ஒருங்கிணைப்பதில் சவால்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டிய அரசாங்கமானது, வேலைவாய்ப்புகளை இழப்போமா என்கிற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது; சமூகங்களிடையேயான வெறுப்பு அரசியலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வாழ்கின்றனர். இந்திய அரசின் நடவடிக்கைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்தியாவில் ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறார்கள். இது குறித்து நீங்களும் போராட வேண்டும், இந்தியாவில் பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தலித்துகள் தாக்கப்படுகின்றனர். சிறுபான்மையினர் அடித்தே கொல்லப்படுகின்றனர். முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மர்மமான முறையில் மரணமடைகின்றனர். இந்தியாவில் ஒரு அசாதாரண நிலையே நிலவுகிறது. இத்தகைய நிலைமைக்கு எதிராக போராடுகிற சக்திகளுக்கு உங்களது ஆதரவைத் தாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன். உங்களது திறமை, பொறுமை, தேசப்பற்றுதான் இன்று இந்தியாவுக்கு தேவை. நாடுகளை நீங்கள் எப்படியெல்லாம் உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு காட்டியிருக்கிறீர்கள். இந்தியாவை மறுசீரமைக்க எங்களுக்கு நீங்கள் உதவுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
0neIndia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval