Tuesday, January 2, 2018

மன உறுதி !!!

Image may contain: horse, outdoor and natureஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.
ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் ,
அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான். அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம்.
என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.
குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
_________
M.y.azar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval