Friday, January 26, 2018

வேலை கொடுத்த பெண்ணுக்கு நடந்த சோகம்! கோவையைப் பதறவைத்த வடமாநிலத் தொழிலாளிகள்



கோவை அருகே, மனைவியைக் கொன்று, நகை பணம் கொள்ளையடித்துவிட்டு, கணவனுக்கும் மின்சாரம் பாய்ச்சி வடமாநிலத் தொழிலாளர்கள் தப்பியோடி உள்ளனர்.

‌கோவை மாவட்டம்,  அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு, இரண்டு மகள் உள்ளனர். ஆனாலும், இவர்கள் தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீடு விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டு வரும் இவர்களது வீட்டில், தற்போது டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. மூன்று வடமாநிலத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால், இரவு அவர்களின் வீட்டிலேயே தங்கி, பணி மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, நேற்று, டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட வட மாநிலத் தொழிலாளர்கள் மூவரும், இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை, கதவு தட்டி எழுப்பிக் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க ராஜாமணி வீட்டினுள் சென்றபோது, பின் தொடர்ந்து சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள், அவரை ஆயுதங்களால், கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர், அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த கணவர் மயில்சாமியைக் கட்டிவைத்து அவருக்கு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளனர். அதற்குள், வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு ராஜாமணியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து வீட்டில் போட்டனர். இதனிடையே, மின்சாரம் பாய்ந்த வலியில், மயில்சாமி அலறவே அக்கம், பக்கத்தினர் மயில்சாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள், வட மாநிலக் கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த அன்னூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் உண்மையிலுமே தொழிலாளர்கள் தானா? அல்லது கொள்ளையர்களா என்ற கோணத்திலும், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
courtesy;vikadan

.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval