ஒரு நல்ல குறிக்கோளோடு இருந்தாலே போதும், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணம் தவறானது.
குறிக்கோள் மட்டும் போதாது; அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய நடை, உடை, பாவனைகள்தான் உங்களுடைய பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கின்றன. அவற்றை நல்ல பழக்கங்களாகக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!
1. சிறந்த தொடர்புகள்!
உங்கள் பக்கத்து வீட்டு நண்பர் முதல் பக்கத்துத் தெரு பலசரக்குக் கடைக்காரர் வரை அனைவரிடமும் ஒரு நல்ல தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களிடமிருந்து பெரிய உதவிகள் கிடைப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.
2. சிறந்ததையே செய்யுங்கள்!
உங்கள் பலமும் பலவீனமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும், உங்களுடைய பெஸ்ட்டை எப்போதுமே கொடுங்கள். ஆனால், இதில் கிடைக்கும் வெற்றியால் உங்களுக்குத் தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
3. திட்டமிடுங்கள்!
நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தையும் திட்டமிட்டு செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எனர்ஜி இருக்கும்போது கடினமான காரியங்களை முதலில் செய்து முடியுங்கள். சிறிய, எளிதான காரியங்கள் அப்புறம் தானாகவே முடியும்.
4. அசை போடுங்கள்!
ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் அன்று இரவு சிறிது நேரமாவது அசைபோட்டுப் பாருங்கள். நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கு அருமையான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
5. துணிவே துணை!
எதையும் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில் எவ்ளோ பெரிய பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்தாலும் உங்கள் துணிச்சல்தான் உங்கள் வெற்றிக்கு ஆணிவேர்.
6. சவாலே சமாளி!
எந்தப் பணியிலும் உங்கள் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்களுடைய பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. கூடவே, நிறைய சவால்களும் காத்திருக்கும். இந்த சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
7. அன்றே செய்!
‘ஒன்றே செய்; அதை நன்றே செய்; அதையும் இன்றே செய்!’ என்று சொல்வார்கள். எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். அன்றைக்குள்ளாகவே செய்து முடித்து விடுங்கள்.
8. வெற்றிக் கூட்டணி!
உங்களுக்கு முன் வெற்றி பெற்றவர்களுடனேயே கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் அவர்களுடைய நேர்மையும் கடும் உழைப்பும் உங்களுக்குப் புரியும். உங்கள் வெற்றிக்கும் கை கொடுக்கும்.
9. கடும் உழைப்பு!
நீங்கள் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் போட்டியாளர்களைவிட அதிகமாக உங்கள் உழைப்பைக் கொட்டினால் வெற்றி என்பது கைகூடி வரும் விஷயம்தான்.
10. இடைவேளை!
உங்களுடைய பணிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவேளை விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவேளையையும் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். இடைவேளைக்கப்புறம் சுறுசுறுப்பாகப் பணிகளைத் தொடர வேண்டும்.
11. வேகமாக எழவும்!
அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள், தாமதமாக எழுந்ததாக சரித்திரம் கிடையாது.
12. உடல் நலம்!
ஒரு நல்ல வெற்றியாளராக வேண்டுமானால், உங்கள் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது.
13. நல்ல விஷயங்கள்!
நல்ல நல்ல விஷயங்களை புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலை, அறிவியல், இலக்கியம், உணவு என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் தோளைத் தொற்றிக் கொள்ளும்!
14. பயணம்!
புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். புதிய ஊரும், அங்குள்ள கலாச்சாரமும், அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறையும் உங்களையும் உங்கள் மனத்தையும் சுறுசுறுப்பாக மாற்றும். உங்கள் வெற்றிக்கும் வழி வகுக்கும்!
15. தன்னம்பிக்கை!
வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!
16. தியாகம்!
ஒரு வெற்றிகரமான மனிதன், தன் வாழ்க்கையில் நிறையத் தியாகங்களைக் கண்டிப்பாகச் செய்திருப்பான். எனவே, எதையும் விட்டுக் கொடுப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள். வெற்றிக் கனிகளை நீங்கள் சுவைக்கலாம்!
17. அடுத்தகட்டம்!
நீங்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டே நீங்கள் அடுத்தகட்டத்திற்கான காய்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
18. மதிப்பீடு!
உங்களுடைய ஒவ்வொரு லட்சியத்தையும் அடிக்கடி மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் பணியின் உண்மையான ப்ளூ பிரிண்ட் உங்களுக்குக் கிடைக்கும். இதுதான் உங்கள் வெற்றிப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.
19. தோற்றம்!
உங்களுடைய வெற்றிக்கு உங்கள் தோற்றமும் மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான நேரங்களில் உங்கள் தோற்றமே உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் உடையாக இருக்கும்.
20. நீங்கள் நீங்களாகவே!
உங்களுக்கு எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும் நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி உங்களைத் தலைக்கனம் கொண்டவனாக மாற்றிவிடக் கூடாது. உங்கள் வெற்றியின் உண்மையான ரகசியமும் இதுவே!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval