Friday, October 30, 2015

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள்

Frutas-y-verduras
ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது சீராக செயல்படுவதோடு, உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பமும் தணியும்.   பொதுவாக உடலில் வறட்சி ஏற்பட்டால், நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். குறிப்பாக மலச்சிக்கல், குடலியக்க கோளாறு, பைல்ஸ், சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் உடலில் வராமல் இருப்பதற்கு, போதிய நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதற்கு தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டுமென்பதில்லை.
ஒருசில நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டாலும், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைத்துவிடும். மேலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, கேரட் போன்றவற்றில் நீர்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் புரோட்டின்களும் அதிகம் நிறைந்துள்ளது. சரி, இப்போது நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
• தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபைன் போன்றவை அதிகம் இருப்பதோடு, 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே அதனை சாப்பிட்டால், நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும். மேலும் இதனை பச்சையாக சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை பெறலாம்.
• கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களும் அதிகம் உள்ளது. இவை உடலுக்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேர்ட் ஜூஸ் குடித்தால், உடல் வறட்சியை நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.
• முள்ளங்கி சாப்பிட்டால், உடலில் இருந்து வெளியேறிய நீரை மீண்டும் பெறலாம். மேலும் இவை எளிதில் செரிமானமடைவதால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக இதனை சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.
• வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவருக்கும தெரிந்த விஷயமே. அதிலும் கோடைகாலத்தில் அதிகம் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டு, உடல் வறட்சியோடு, மலச்சிக்கலையும் தடுத்துவிடுங்கள்.
• சிட்ரஸ் பழத்தில் ஒன்றான ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
• நார்ச்சத்து அதிகம் உள்ள அன்னாசியில், நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது.
• நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் பிரபலமான உணவுப் பொருள் தான் தர்பூசணி. அதிலும் இந்த பழம் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவுப் பொருளில் வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் தையமின் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது.
• திராட்சை பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval