Sunday, October 11, 2015

பொதுமக்கள் நம்பிக்கை


trust-பொதுமக்களுக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கை இருக்கிறதா, அது குறைகிறதா, அதை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் வெளி மாநிலத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்றேன். விமானத்தில் செல்கையில் சக பயணி என்னுடன் பேசத் துவங்கினார். சற்று நேரத்திற்குப் பின் நீங்கள் பேராசிரியரா என்று கேட்டார். இல்லை என்றேன். பின்னே ஒன்றும் பேசாமல் இருந்துவிடலாமா என்று நினைத்தேன், பிறகு அது மரியாதை இல்லை என்று தோன்றியது.
“ஓய்வு பெற்ற நீதிபதி மேடம், இன்னமும் ஒரு துறையில் இந்த நாட்டினருக்கு நம்பிக்கை உள்ளது என்றால், அது உங்கள் துறை தான். தினமும் எதிர்மறைச் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும் உங்களை நம்புகிறோம். உங்கள் துறையில் தவறு நடக்கிறது என்றால், அது எங்கள் அடிவயிற்றில் குத்துகிறது’ என்றார்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய நம் முன்னோர்கள் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் பதவி ஏற்பவர்கள், அறம் பிறழாமல் இருப்பார்கள் என்று நம்பினார்கள்.
சட்டத் துறையும், அரசுத் துறையும் வரம்பு மீறாமல் இருப்பதைக் கண்காணிக்க அமைந்திருக்கும் நீதித் துறை மிக கவனமாக அறத்தை நிலைநாட்டும் என்றும் தானே கள்வனாக இராது என்றும் நம்பினார்கள். இவ்வாறு பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றமும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது.
நீதித் துறையில் பொதுமக்களின் நம்பிக்கை என்றால் என்ன? அதற்கு ஒரு முகம் தானா? இல்லை பல முகங்கள் உள்ளதா?
யாரை நீதிபதிகளாக தேர்வு செய்கிறோம் என்பதில் நம்பிக்கை இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யும் முறையில் தெளிவு இருக்க வேண்டும். அதில் ஒளிவு மறைவிற்கு இடம் இல்லை.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான ருமா பால் ஒருமுறை தன்னுரையில், “முன்பு அரசுத் துறையின் கைகளில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் இருந்தபோது, அனைத்தும் ரகசியமாகவே நடந்தது. தவறான நியமனங்கள், தகுதியின் அடிப்படையில் அல்லாது வேறு காரணங்களுக்கு பரிந்துரை செய்வது என்பவை சகஜம் என்று சொன்னோம். இன்று நீதித் துறை அந்த அதிகாரத்தை எடுத்துக்கொண்டபின் அதே தவறுகள் நடக்கின்றன’ என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார் (Fifth V.M. Tarkunde Memorial Lecture).
ஏன் ஒருவரைத் தேர்வு செய்கிறார்கள் என்பது தெளிவாக இருக்க வேண்டும். அடுத்தது தேர்வு செய்யும் முறை சரியாக இருக்கவேண்டும். அந்த அதிகாரம் கலீஜியம் நீதிபதிகளின் கைகளில் இருந்தாலும் சரி அல்லது தேசிய நீதித் துறை நியமனக் குழுவின் கைகளில் இருந்தாலும் சரி. எந்த முறையாக இருந்தாலும் தேர்வு செய்யப்படுபவர்களின் திறமை பற்றி எவருக்கும் அவநம்பிக்கை இருக்கக் கூடாது.
இறுதியாக நம் சமூகத்தின் எல்லா அங்கங்களையும் இயன்றவரை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். நானும் ஒரு நாள் அங்கே அமர முடியும் என்று ஒவ்வொரு மாணவ – மாணவியரும் நினைக்க வேண்டும். இது தேர்வு செய்யும் படலம்.
அடுத்ததாக, நீதிபதிகள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது முக்கியம். அதுவும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும். இது 24•7 என்கிறார்களே அதுபோன்ற பணி.
10 மணியில் இருந்து 5 மணி வரை நேர்மையாக இருந்துவிட்டேன் என்று ஒரு நீதிபதியின் நேர்மை ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. அதுபோலத்தான் அவரின் கண்ணியமான நடத்தை, போக்கு, பேச்சு எல்லாமே.
பொதுமக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மதிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வழக்குகளை விசாரணை செய்யும்பொழுது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதும் பொது நம்பிக்கையை வலுப்படுத்தும்.
ஸôக்ரடீஸ் 4-ஆவது நூற்றாண்டில் சொன்னார். ஒரு நீதிபதி வழக்கை விசாரணை செய்யும்பொழுது கேட்பதில் மரியாதை, பேச்சில் விவேகம், எண்ணத்தில் நிதானம், தீர்ப்பில் பாரபட்சமின்மை என்ற நான்கு சிறப்பம்சங்கள் இருக்கவேண்டும் என்றார்.
எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் வழக்காடியாக செல்லும் ஒருவர் இதைத்தான் எதிர்பார்க்கிறார். இவை இருந்துவிட்டால், பொது நம்பிக்கை தானே வரும்.
அடுத்தது, வழக்கை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதுவும் முக்கியம். காலம் கடத்தாமல் தீர்ப்பு வழங்குவது நம்பிக்கையை வலுப்படுத்தும்.
ஒருவர் மாங்காய் செடி நட்டாரே. இந்த மரம் வளரும் வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்றால், அவர் சொன்னார், “நான் இந்தக் கனியை உண்ணமாட்டேன். ஆனால், என் பேரனுக்கு கிடைக்கும்’ என்று. அந்தக் கதைப்போல வழக்குகள் இருக்கக் கூடாது.
குறைவான நீதிமன்றங்கள், கூடுதலான வழக்குகள் என்று புள்ளிவிவரங்கள் தெரியும். இருந்தும் இயன்றவரை விரைவாக வழக்குகளை முடிக்க முயற்சி செய்ய வேண்டும். தீர்ப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்.
வாதி இதைச் சொன்னார். பிரதிவாதி அதைச் சொன்னார். நான் இதோ முடிக்கிறேன் என்று மந்திரத்தில் மாங்காயாக தீர்ப்பு இருக்கக் கூடாது. ஏன் இந்த முடிவு என்பது தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட வேண்டும். அப்பொழுது தோற்றவர்கள்கூட தான் ஏன் தோற்றோம் என்று புரிந்து கொள்வார்கள்.
பொதுமக்கள் என்னதான் நினைக்கிறார்கள் நீதிபதிகளைப் பற்றி? நீதிமன்றம் இல்லையென்றால் வேறு கதி இல்லை. அவர்கள் தெய்வம் போல் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், எதிர்மறை அபிப்பிராயங்களும் இருக்கின்றன.
நீதிபதிகள் பொதுமக்களிடம் இருந்து விலகி இருக்கிறார்கள் என்றும், ஏழைகளைவிட செல்வந்தர்களுக்குத்தான் சாதகமான உத்தரவுகள் கிடைக்கின்றன என்றும் நினைக்கிறார்கள். பாரபட்சம் இருக்கிறது என்றும் நினைக்கிறார்கள்.
வழக்குகளை இரண்டு விதமாக வகைப்படுத்தலாம். தானாக தாக்கலாகும் வழக்குகள் (Involuntary litigation), சுயமாக தாக்கல் செய்யும் வழக்குகள் (voluntarylitigation). அதென்ன குற்றவியல் வழக்குகள் முதல் வகை (criminal cases), உரிமையியல் வழக்குகள் இரண்டாம் வகை (civil cases).
காவல் துறையில் புகார் கொடுத்தால் முதல் வகை வழக்கு தாக்கலாகும். மற்றதில் நாம் நீதிமன்றக் கட்டணம் செலுத்தி வழக்கைத் தாக்கல் செய்யவேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையின் ஒரு அளவு கோல் இவ்விரு வகை வழக்குகளும் எந்த எண்ணிக்கையில் தாக்கலாகின்றன என்பது. முதல் வகை கூடுதலாகவும் இரண்டாம் வகை குறைவாகவும் இருந்தால், பொது நம்பிக்கை குறைவு என்று பொருள்.
நம் நாட்டில் மேற்கில் பல மாநிலங்களில் முதல் வகை தான் அதிகம். இது நாள் வரை நம் மாநிலத்தில் அப்படி இல்லை. இப்பொழுது மாறி வருகிறது என்கிறார்கள். அந்தப் போக்கை நேரத்தில் தடுக்க ஆவன செய்ய வேண்டும். என் நண்பர் ஒருவர் சொன்னார், வசதி படைத்தவர்கள் நீதிமன்றத்துக்கு வலிய செல்கிறார்கள், ஏழைகள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். எவ்வளவு ஆழமான வார்த்தைகள்!
எந்த முறையில் நீதிபதிகளைத் தேர்வு செய்தால் என்ன, இறுதியில் அந்த ஆசனத்தில் அமர்பவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது தானே முக்கியம்.
ஒரு முறை வடக்கே ஒரு பெண்ணுரிமை மாநாட்டுக்குச் சென்றேன். ஒரு பெண் வழக்காடி தன் அனுபவத்தைப் பற்றிப் பேசினார். நான் குடும்ப நல நீதிமன்றத்தில் சென்று வாய்தா கேட்டேன். என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை நீதிபதி. வாய்தா கொடுக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை. நாங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என்றார். ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்தார். ஆனால், என்ன தீர்க்கமான தெளிவு, என்ன எதிர்பார்ப்பு அதன்பின் என்ன ஏமாற்றம்!
செங்கோலே என்னைக் குத்தினால் நான் யாரிடம் முறையிடுவேன் என்று ஓர் எளிய தேரை கேட்ட நாடு நம் நாடு.
நாம் என்றோ இதைச் சொல்லிவிட்டோம்.
இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையாராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனமுறமருகி நின்றழுத கண்ணீர்
முறையுறத்தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாள் ஒக்கும்மே.
எதிர்மறைச் செய்திகள் வந்தாலும் நீதித் துறை தான் நமக்கு இருக்கும் ஒரே போக்கிடம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. அப்படித்தான் இன்று வரை நம்புகிறார்கள் மக்கள். அவர்கள் மனமுறமருகி நின்று அழாமல் பொது நம்பிக்கையைக் காக்க வேண்டும்.
“இன்ஸôஃப் கா மந்திர் ஹை, யே பக்வான் கா கர் ஹை’ என்று ஒரு பழைய ஹிந்தி பாடல். இது நீதியின் கோயில், இறைவனின் உறைவிடம். இதையே தான் என்னுடன் விமானத்தில் பயணித்தவரும் நினைக்கிறார்.
கட்டுரையாளர்:
நீதிபதி (ஓய்வு).
10 மணியில் இருந்து 5 மணி வரை நேர்மையாக இருந்துவிட்டேன் என்று ஒரு நீதிபதியின் நேர்மை ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. அதுபோலத்தான் அவரின் கண்ணியமான நடத்தை, போக்கு, பேச்சு எல்லாமே. வழக்குகளை விசாரணை செய்யும்பொழுது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதும் பொது நம்பிக்கையை வலுப்படுத்தும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval