Thursday, October 22, 2015

கேரளாவை கலக்கும் பட்டுகோட்டை தமிழச்சி

12107068_1645795382342722_4400219496380364422_n
கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு ‘கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், ‘ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம்’ என வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்தது கேரளா.
பரபரவெனப் பற்றிக்கொண்ட விவகாரம், முக்கியக் குற்றவாளி ஈகிள் ராஜன் கைது வரை நீண்டது. அவருடைய டைரியில் தந்தங்களுக்கு ஆசைப்படும் இந்தியத் தொழிலதிபர்களின் பெயர்கள் நீள்கின்றன. தினம் தினம் யானை வேட்டைக் கொடூரம் தலைப்புச் செய்தியாக்கப்பட, கேரள எதிர்க்கட்சிகள் விவகாரத்தைக் கையில் எடுக்க, தற்போது யானை வேட்டைக்கு சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறார் முதலமைச்சர் உம்மன் சாண்டி. கேரளாவில் நடக்கும் இத்தனை களேபரங்களுக்கும் காரணம்… ஒரு தமிழ்ப் பெண் அதிகாரி… உமா… திருவனந்தபுரம் டி.எஃப்.ஓ. பொட்டுத் தூக்கம் இல்லாமல், இரண்டு நாட்கள் இவர் மேற்கொண்ட தொடர் சோதனையின் மூலம் யானை வேட்டைக் கும்பலின் ஆணிவேரையே காலிசெய்தவர். கொலை மிரட்டல், பொய் வழக்குகள் என இப்போது மாஃபியா கும்பல் இவரை அச்சுறுத்தினாலும், அசராமல் காட்டுக்குள் வலம்வருகிறார் உமா.
சொந்த ஊர் பட்டுக்கோட்டை பக்கத்துல ஒட்டங்காடு கிராமம். பி.எஸ்ஸி தோட்டக்கலை படிச்சேன். படிப்பில் எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க்தான். பரம்பரையிலேயே நான்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி. 2009-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் ரேங்க். சின்ன வயசுல இருந்தே இயற்கை மேல காதல். ஏன்னா, இங்கே இயற்கை இல்லாமல் எதுவுமே கிடையாது. அதான் விரும்பி தேர்ந்தெடுத்து ஐ.எஃப்.எஸ் ஆனேன். 2013-ம் ஆண்டில் இருந்து திருவனந்தபுரம் டி.எஃப்.ஓ-வா வேலைபார்க்கிறேன். இந்த டிவிஷன்ல வேலைபார்க்கிற முதல் பெண் அதிகாரி நான்தான். ஒரு பெண் தன் துறையில் தன்னை நிரூபிக்க, ஆண்களைவிட இரண்டு மடங்கு கடுமையா உழைக்கவேண்டியிருக்கு. ஆனா, ‘நம்மால் முடியும்’னு உணர்த்திட்டா, ஆண்களைவிட அதிக மரியாதையோடு வேலைபார்க்கலாம்!”
”தந்த வேட்டை கும்பல் எப்படிச் செயல்படுறாங்க?”
”யானை வேட்டைக்கு திருவனந்தபுரம்தான் தலைமைச் செயலகம். ஏற்கெனவே காட்டு இலாகாவில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற ‘வாட்ச்சர்ஸ்’, யானை நடமாட்டம் பத்தி தகவல் கொடுப்பாங்க. ஒரு குரூப், யானையைக் கண்டுபிடித்து வேட்டையாடும். வெட்டப்படும் தந்தங்கள் துண்டு துண்டாக்கப்பட்டு ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு விற்கப்படும். இன்னொரு கும்பல் காசு கொடுத்து தந்தத் துண்டுகளை வாங்கிச் செல்லும். கேரள தந்த வணிகர்களிடம் துண்டாக்கப்பட்ட தந்தம் கிலோ 20 ஆயிரத்துக்கு விற்கப்படும். அந்த வணிகர்கள் அதை கலைப்பொருட்களாக மாற்றி, வி.ஐ.பி-களுக்கு சப்ளை செய்வார்கள். கலைப்பொருட்களின் வடிவத்தைப் பொறுத்து லட்சம், கோடி வரைகூட விலை போகும். நாங்க முதல்ல திருவனந்தபுரம் தந்த வணிகர்களைக் குறிவெச்சுத்தான் ரெய்டு அடிச்சோம். முதல்ல பிடிபட்ட 14 பேர் கொடுத்த தகவல்களைவெச்சு, அடுத்தடுத்து 40 வேட்டைக் காரர்கள் வரை கைதுசெய்தோம். அவங்களைச் சுதாரிக்கவே விடலை. அதான் அவங்களுக்குப் பெரிய அதிர்ச்சி!”
ஆனால், யானை வேட்டை வழக்கில் பிடிபட்டவர்கள் உங்கள் மீது வழக்கு போட்டுள்ளார்களே?”
”ஹா… ஹா..! நாம எதிர்பார்க்க முடியாத பலமான நெட்வொர்க் அவங்களோடது. அதைவெச்சு ஒரு நேர்மையான அதிகாரியை முடக்க என்னல்லாம் பண்ண முடியுமோ, அதை எல்லாம் பண்றாங்க. ‘கைது செய்தவர்களை வாகனத்தில் போகும்போது நான் அடிச்சுட்டே போனேன்’னு மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருக்காங்க. இத்தனை வருஷமா தங்குதடை இல்லாமல் நடந்துவந்த தந்த வேட்டை என்னால் முடிவுக்கு வருவதை அவங்களால ஏத்துக்க முடியலை. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி அஜிபிரைட் என்பவர்தான். அவர் கைதானப்போ ஒரே ஒருநாள்தான் அவரை நான் பார்த்தேன். அன்னைக்கே கோர்ட்டில் ஆஜர்படுத்திட்டோம். ஆனா, அவரை நான் இரும்புக் கம்பியால் அடிச்சதால் கடுமையான காயம் ஏற்பட்டு, மணிக்கட்டு உடைஞ்சிருச்சுனு சொல்லி என் மேல் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க… அதுவும், 326-வது செக்ஷன்படி. இந்தப் பிரிவின் கீழ் 10 வருஷம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கலாம். என் வீட்டில் திருடுபோயிருச்சுனு நான் யாரையும் கைது பண்ணலை. யானையைக் கொன்று வனவளத்தை அழிச்சவங்க மேலதான் நடவடிக்கை எடுத்தேன். அதுக்காக எனக்குக் கிடைச்ச பரிசுதான் இது. என் மேல தொடர்ச்சியா வழக்கு போட்டா நான் பயந்துடுவேன்னு நினைக்கிறாங்க. இந்தத் தொடர் வழக்குகள் என்னை இன்னும் உறுதியாக்கவே செய்யும்!”
அழிவின் விளிம்பில் ஆசிய யானைகள்!

கேரளாவில் யானை வேட்டையாடுவதில், அய்யக்கர மட்டம் வாசு என்பவன் கில்லாடி. ஒரே தோட்டாவில் யானையின் உயிரை காவு வாங்குபவன். ‘கேரள வீரப்பன்’ என்றே இவனை அழைக்கிறார்கள். மும்பையில் இருந்து ரயிலில் இவன் வரும் தகவல் கேள்விப்பட்டு வனத் துறை அதிகாரிகள் ரயில் நிலையத்தில் காத்திருக்க, மும்பையில் அவன் தூக்கு மாட்டி இறந்த தகவல் வந்திருக்கிறது. ‘யானைகளை மனசாட்சி இல்லாமல் கொன்றவன், தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அவன் போலீஸிடம் சிக்கி உண்மைகளைப் பேசத் தொடங்கினால், பல பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என்பதால் கொல்லப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள் கேரள வனத் துறையினர். அந்த அளவுக்கு வட இந்திய, தென் இந்திய தொழிலதிபர்கள் பலர் யானை தந்த கலைப்பொருட்களின் வாடிக்கையாளர்கள். அவர்கள் உண்டாக்கும் டிமாண்ட் காரணமாக, ஆசியக் காடுகளில் இருக்கும் சுமார் 1,500 ஆண் யானைகளில் கடந்த சில வருடங்களில் 388 யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது தகவல். தந்த வேட்டை இதே வேகத்தில் நீடித்தால், ஆசிய யானைகள் இனமே அழிந்துவிடும் என அஞ்சுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval