Friday, October 23, 2015

பேஸ்புக் நட்பினால் விபரீதம்: இன்ஜினியரிங் மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை


சென்னை:புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜி (45). 
திருவிக நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதி செயலாளர். இவரது மகள் பிரியா (21). கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ 4ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20ம் தேதி பிரியா மன உளைச்சலுடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட பிரியா, வியாசர்பாடி ராமலிங்க அடிகளார் கோயில் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், ராஜி மற்றும் உறவினர்கள், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், பிரியாவை மிரட்டி ஒரு வாலிபர் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், போலீசார் புகாரை வாங்க வில்லை. அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புளியந்தோப்பு போலீசார், ரயிலில் அடிபட்டு இறந்ததால் இந்த வழக்கை ரயில்வே போலீசார் விசாரிக்க வேண்டும். ரயில்வே போலீசில் புகார் செய்யும்படி அறிவுறுத்தினர். பிரியாவின் உறவினர்பெரம்பூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். புகாரில் செங்குன்றம் மொண்டியம்மாள் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (22) என்பவர், எனது மகள் பிரியாவுடன் படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது போனில், பிரியாவின் போட்டோவை காண்பித்து பிளாக்மெயில் செய்து மிரட்டி வந்தார்.

இதனால் கடந்த ஒரு வாரமாக பிரியா மன உளைச்சல் ஏற்பட்டு தனிமையில் இருந்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு அந்த பையனிடம் கெஞ்சி போட்டோவை அழித்து விடு என்று கூறி அழுதுள்ளார். அதற்கு அந்த வாலிபர், பேஸ்புக்கில் படத்தை போடுவேன் என கூறி மிரட்டவும் செய்துள்ளார். இதனால் எனது மகள் தற்கொலை செய்து கொண்டாள். இதற்கான ஆதாரமாக எனது மகளின் செல்போனில் பதிவான குரல் பதிவை வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் அனுப்பி உள்ளோம். எனவே சம்பந்தபட்ட வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வீட்டாரை பெரம்பூர் ரயில்வே போலீசாரும், புளியந்தோப்பு போலீசாரும் அலைக்கழிப்பதால் பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேதனை அடைந்தனர். தொடர்ந்து காவல் நிலையத்தில், வாலிபரை கைது செய்ய கோரி  இரவு முழுவதும் அங்கே இருந்தனர்.
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval