Sunday, October 25, 2015

டெங்கு காய்ச்சல் தடுக்கும் பப்பாளி இலைச்சாறு

8908329
பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது. வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படு
கிறது.
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் வருகிறது. ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரசுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை வராது.
எப்படி பரவுகிறது?
ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) எனும் உடலில் கோடுகள் உள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளியிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர்தான் அடுத்தவர்களுக்கு பரவும். நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.
டெங்கு அறிகுறிகள்
கொசு கடித்து நோய் வர 5 முதல் 15 நாள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து சில மணி நேரத்தில் வரும். காய்ச்சல் 104 பாரன்ஹீட் வரை போகலாம். நாடித்துடிப்பு குறைதல், ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். கண்கள் சிவக்கும், உடலில் தோலின் நிறம் மாறும்.
சிகிச்சை முறை
இதற்கு தனியாக மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பாராசிட்டமல், போதிய ஓய்வு, நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல்தான் இதற்கு சிகிச்சை. மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரணிகள் எடுத்தால், ரத்த இழப்பு அதிகமாகலாம்.
ரத்த கசிதல் ஜுரம்
இந்த வகையான டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று வலி, ரத்தக்கசிவு போன்ற மோசமான உடல்நிலை உருவாகும். இந்த வகை டெங்கு, தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும். இருமல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி வரலாம். 2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி நீலமாகி மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும்.தோலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம் போய் கருப்பு மலம், பல் ஈரலில் ரத்த கசிவு, மூக்கில் ரத்தம் போன்றவை வரலாம்.
சித்த வைத்திய முறை
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பது எப்படி?
பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும் முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மலைவேம்பு இலைச்சாறு
புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. நிலவேம்புக் குடிநீர்நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்துவிடும்.
மேற்கண்ட சாறுகளையும் குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும் 2நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.
தடுக்கும் முறை
* வைரஸ் நோயாளியிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும்.
* டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான ஏடிஎஸ் கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும். வீணான பொருட்களை அகற்றிவிட வேண்டும்
* வீட்டில் உபயோகப்படுத்தாத கழிவறைகளில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி கழிப்பிடங்களை அடிக்கடி சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும்.
* குடிதண்ணீர் பற்றாக்குறை காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் வைத்துக்கொள்ளாதபடி பார்த்து கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசுக்கள் அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
* பொதுவாக இந்த கொசுவின் வாழ்க்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ ஏதுவாக அமைந்து விடும்.
* நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, பிரிட்ஜ் மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது நீக்கி விடவேண்டும்.
* கொசு கடிக்காமல், கை கால்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு வராமல் பார்த்து கொள்ளலாம்.
* உடலில் தேய்க்கும் கொசு மருந்துகளை உபயோகபடுத்தலாம். ஆனால் தோல் அலர்ஜி இது உண்டு பண்ணலாம்.
* இந்த கொசு அதிகாலை (சூரியன் உதயம்) மற்றும் மாலையில் (சூரியன் மறையும் நேரம்) கடிக்கும்.
* சுருங்க சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதை தடுக்க முடியும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval