Monday, October 5, 2015

பேச்சுவார்த்தையில் உடன்பாடு லாரி ஸ்டிரைக் வாபஸ்

lorry-strike-called-off
சுங்கச்சாவடிகள் மற்றும் சுங்கக்கட்டணத்தை முறைப்படுத்த குழு அமைத்து வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டு 5 நாட்களாக நீடித்த லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இன்று முதல் லாரிகள் வழக்கம் போல் இயங்கும். நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும். சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும். லாரி வாடகையில் டிடீஎஸ் பிடித்தம் செய்யக்கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் கடந்த 1ம் தேதி துவங்கியது. 5வது நாளாக லாரி ஸ்டிரைக் ேநற்றும் நீடித்தது.
இந்தியா முழுவதும் 92 லட்சம் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 7 லட்சம் லாரிகள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு லாரிகள் லோடு ஏற்றி செல்லவில்லை. அதே போல வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கும் லாரிகளில் சரக்கு வரவில்லை. இதனால் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வீதம் கடந்த 5 நாட்களில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்கு தேக்கமடைந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் தரப்பில் மத்திய அரசை கண்டித்து சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள், முட்டை லாரி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அடையாள வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர். டேங்கர் லாரி உரிமையாளர்களும் இன்று ஒரு நாள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவும் லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டனர். கடந்த 5 நாட்களாக நடந்த லாரி ஸ்டிரைக்கால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளி, இன்ஜினியரிங் ஆலைகளில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் வெளி மாநிலத்திற்கு செல்லவில்லை. அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொண்டு வருவது, இங்கிருந்து காய்கறி கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு தரப்பில் ஓரளவு இறங்கி வந்தனர். சுங்க கட்டணம் மற்றும் சுங்கச்சாவடிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. பிரச்னைகளை களைவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் இருவரும், மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவரும் இடம் பெறுவர் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவை ஏற்று லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாக நேற்று இரவு 8.45க்கு அறிவித்தனர். இதுபற்றி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறுகையில், லாரி அதிபர்களின் முக்கிய கோரிக்கைகளான சுங்கச்சாவடிகள் மூடல், டிடீஎஸ் வரி மற்றும் சேவை வரி முறைப்படுத்துதல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் கட்கரி எழுத்து வடிவில் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இதற்காக 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இதில் 2 பேர் லாரி அதிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் டிசம்பர் 15ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஒவ்ெவாரு லாரிக்கும் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் சுங்கவரியாக ஒட்டுமொத்தமாக செலுத்த தயார் என்று அரசுக்கு தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்ததால் லாரிகள் ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்படுகிறது என்றார். இதையடுத்து லாரிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval