விண்ணையும் மண்ணையும் படைத்திட்டு
விதியையும் மதியையும் கொடுத்திட்டு
தன்னிலை உணர்ந்திட சோதனைகள்
தரமான வாழ்வுக்குப் போதனைகள்
தந்திட்ட ஆண்டவன் சிறப்பன்றோ
தரமாக்கி வாழ்தல் நலமன்றோ
அகிலம் முழுதாளும் ஆண்டவனே
அகம் முழுதும் நிறைந்திருக்கும் தூயவனே
மகத்துவம் மிக்க உன் கருணை
மானிடர்க்குக் கிடைத்திடனும் எந்நாளும்
ஆண்டவனே நாங்களென்றும் உன்னடிமை
அயராது போற்றிடுவோம் உன்புகழை
தீமைகள் யாதுமே தீண்டாது
தீர்க்கமாய்த் தடுத்திடு நாயனே
நன்மக்கள் கூட்டத்தில் நாளைமறுமையில்
நலமாய் எங்களைச் சேர்த்திடுவாய்
நாயன் உன் புகழை நாள்முழுதும்
நாவினால் உரைக்கச் செய்திடுவாய்
எத்தனை துன்பம் வந்தபோதும்
அத்தனையும் இன்பம் உனை நினைத்தால்
பித்தனைக் கூட தெளியவைக்கும்
நித்தமும் உன்னை வணங்கி வந்தால்
ஓரிறைக் கொள்கை நிலையன்றோ
ஒவ்வாதோர் வாழ்வில் குறையன்றோ
மாறாக மனிதனை வணங்குதலோ
மடமைக்கு வழிவகுக்கும் செயலன்றோ
இறையோன் உந்தன் கருணையிலே
இயங்குதே இவ்வுலகு இயல்பாக
இயலாத காலம்வரை இறையோனை
இறையச்சம் கொண்டு வணங்கிடுவோம்
மறையோனைக் காண மனதார
மஸ்ஜிதில் வணங்குவோம் பயத்தோடு
மடிநிறைய மறுமைக்கு நன்மை சேர்த்து
மகிழ்வோடு செல்வோம் மஹ்சர் நோக்கி
ஆண்டவன் கட்டளையில் அசைகிறதே
ஆதிக்கம் செய்யும் அனைத்துயிரும்
மாண்டபிறகு இறையோனின் மகத்துவத்தை
மறுமை நாளில் நாம்காண்போமே.!
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval