கர்நாடக மாநிலத்தில் முழுமையாக சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடக அரசின் சார்பில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் பெங்களூரு மாநகரம் முழுவதும் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது.
அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இறைச்சி விற்பனை நிலையங்கள், காய்கனி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் மீது சமயம் கிடைக்கும்போது சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். சோதனை காலத்தில் ஓரிரு நாட்கள் உற்பத்தி நிறுத்தினாலும், பின் ரகசியமாக தயாரித்து வர்த்தகர்களுக்கு சப்ளை செய்கிறார்கள்.இந்நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 40 மைக்ரானுக்கும் குறைவான தரம் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் மகத்தான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக சிறப்பு சட்டம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது. புதியதாக அமல்படுத்தும் சட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது, ஏற்றுமதி செய்வது, சேமித்து வைப்பது அனைத்துக்கும் தடை விதி்க்கும் அம்சங்கள் சேர்க்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள், பயணிகள் வாகனம் உள்ளிட்டவைகளில் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகளை சோதனைச்சாவடிகளில் நிறுத்தி பறிமுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்படும் பட்டியலில் கேரிபேக், திருமணமண்டபங்களில் உணவு பரிமாறும் மேஜையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர், தெர்மாகோல் பிளேட், பிளாஸ்டிக் கிளாஸ், பேனர், பிளக்ஸ் போர்டு ஆகியவை அடங்கும். அதேபோல் பால் பாக்கெட், சுகாதார துறை பயன்படுத்தும் சிரஞ்ச், தோட்டக்கலை பண்ணைகளில் செடி வளர்க்க பயன்படுத்தும் பாட்டீல் ஆகியவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தடை விதிப்பது தொடர்பாக சட்ட மசோதா வரும் நவம்பர் மாதம் நடக்கும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்படும் சட்டம் முழு பலன் கொடுக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆர்.மகேந்திரகுமார் கூறும்போது, நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பல்வேறு முற்போக்கு திட்டங்கள் செயல்படுத்துகிறது. ஆனால் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது. ஒலிமாசு தடுப்பு, தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேற்றும் புகை, மருத்துவம், மின்னனு கழிவுகள், தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகள் பெருமளவில் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மாநில அரசு பிளாஸ்டிக் தடை செய்யும் மகத்தான முடிவெடுத்துள்ளது. அதை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval