Sunday, October 25, 2015

கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் இல்லை: ஸ்டாலின்

20TH_STALIN_MANDAT_2596662f
பரஸ்பர நட்புறவின் அடிப்படையில் கூட்டணிக்குத் தயார், இதற்கு எவ்வித முன் நிபந்தனையும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமையன்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஸ்டாலின் தெரிவித்த போது, “அதிமுக ஆட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வியுற்ற ஆட்சியாகவே உள்ளது, இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த மாற்றத்தை திமுக நிகழ்த்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
சகோதர உணர்வுடன் பரஸ்பர புரிதல் உள்ள அரசியல் கட்சிகள் சேர்ந்து பணியாற்ற முடியும். முன் நிபந்தனைகள் எதுவும் இவ்விவகாரத்தில் இல்லை” என்றார்.
விஜயகாந்தின் தேமுதிக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, உறுதியாக எதையும் தெரிவிக்காத ஸ்டாலின், ‘தேர்தலுக்கு இன்னும் சில காலம் உள்ளது’ என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு பற்றி ஸ்டாலின் கூறும்போது, மற்ற கட்சியின் பலத்தையும் மீறி கடந்த காலங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றார்.
நமக்கு நாமே திட்டம் ஒரு நாடகம் என்ற குற்றச்சாட்டினை மறுத்த அவர், இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை மற்ற கட்சிகளால் சீரணிக்க முடியவில்லை.
“ஊழலற்ற, வசூலற்ற, கமிஷனற்ற ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று மக்களிடம் உறுதியாகக் கூறிவருகிறேன்” என்றார்.
மேலும் முறைகேடுகள் நடக்க வழி வகை ஏற்படாத அளவுக்கு திறமையான ஆட்சியை வழங்குவோம் என்றார் ஸ்டாலின், “திமுக உறுதிமொழிகளை நிறைவேற்றியே வந்துள்ளது, எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், எங்கள் திறமையை சந்தேகிக்க வேண்டாம், வெளிப்படையான நிர்வாகத்தை எங்களால் வழங்க முடியும்”
இவ்வாறு கூறினார் ஸ்டாலின்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval