ஒருமனிதனுக்கு பாக்கியத்திலும் பெரும்பாக்கியம் என்று சொன்னால் அது குழந்தைபாக்கியமாகத்தான் இருக்கமுடியும். குழந்தைபாக்கியம் பெற்றிருந்தால்தான் இவ்வுலக மக்கள் ஒரு ஆணையும்,பெண்ணையும் முழுமையான அடையாளமாக பார்க்கிறார்கள். எத்தனை கோடி செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் பலவசதிகளைப் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியமில்லாதோர் வாழ்வில் மனதார மகிழ்ச்சியோ சந்தோசமோ இருக்க வாய்ப்பில்லை.
வீட்டில் ஒலிக்கும் மழலையின் அழுகைச் சப்தமும் விளையாட்டுச் சப்தமும்தான் அந்த வீட்டார்க்கு மனதில் எத்தனைகவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து ரசிக்க வைக்கும். மழலையரின் மழலைமொழி இனியராகமாய் மனதிற்கு மகிழ்வையும் இதயத்திற்கு இனிமையும் தரும். அதில் கிடைக்கும் ஆனந்தமும்.மகிழ்வும் ஒரு தம்பதியருக்கு வேறு எதிலும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் எந்த பொருளோடவும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத ஒப்பில்லா மனித வாரிசாகும்.
ஒருதம்பதியினருக்கு திருமணம் முடிந்ததும் அடுத்ததாக நமது சொந்தபந்தங்களும் , உற்றார் உறவினர்கள் நண்பர்களென்று அனைவரும் எதிர்பார்ப்பது முதற்க்குழந்தையைத்தான்.! அப்படிக் குழந்தை உண்டாக காலதாமதமாகிப் போனால் அத்தம்பதியினர் சமுதாயத்தார் மத்தியில் பல அவச்சொல் கேட்கவும் பல கேலி நையாண்டிக்கு ஆளாகவும் நேரிடுகிறது.
ஆண்மை பெண்மை குறித்த சந்தேகங்களைச் சொல்லியும் மனதை சங்கடப்படுத்துவார்கள். இத்தகைய இழிவுச் சொல்லுக்கு ஆளாகும்படியான உயிரணுக் குறைபாடுகள் இயற்கையிலேயே சிலருக்கு இருந்தாலும் தீயபழக்கங்களின் விளைவாகவும் இத்தகைய குறைபாடுகளை ஏற்படுத்திக் கொள்வது பெரும்பகுதியாக இருப்பதே வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது.
ஆம்...குழந்தை பாக்கியமின்மைக்கு முதற்காரணம் நாம் அலட்சியமாக ஆரம்பிக்கும் தீய பழக்கங்களான புகைபிடித்தல், மது அருந்துதல்,கேடுவிளைவிக்கும் போதைதரும் பொருளை பயன்படுத்துதல் ஆகியவை நாளடைவில் அது நிரந்தரப்பழக்கமாகி உடலில் பலமாற்றங்களை ஏற்ப்படுத்தி உயிரணுக்களை பலகீனமடையச் செய்து இறுதியில் ஆண்மையை பாதிக்கும் அளவுக்கு விபரீதமாகிவிடுகிறது.
ஆண்மைக் குறைபாட்டிற்கு இத்தகைய தீய பழக்கங்கள்தான் முக்கிய காரணமாக இருப்பதாக பல மருத்துவர்களும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படி தெரிந்திருந்தும் தொடர்ந்து தீயபழக்கங்களை கைவிடாமல் சிலர் மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டு தனக்கு வரவேண்டிய வாரிசுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைபாக்கியம் என்பது பல சன்னதிகளை உருவாக்கி சமுதாயத்தை பெருக்கும் மிகப்பெரும் உன்னத சக்தியாக விளங்குகிறது.. இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரும் சக்தியை தனக்குள்ள தீயபழக்கத்தால் தனது உடலையும்,மானத்தையும் மரியாதையையும் இழப்பதுடன் குழந்தை பாக்கியத்தையும் சேர்ந்து இழக்கலாகுமா..??? எனவே இத்தகைய இழப்புக்களை சந்திக்குமுன் சிந்தித்துப் பார்த்தோமேயானால் சந்தோசமாய் வாரிசுகளை வாரியணைக்கலாம்.
அப்படி இல்லையேல் மழலைச் செல்வத்தை மடியில் சுமைப்பதை விடுத்து மலட்டுப் பட்டத்தை மனதில் சுமந்து கொண்டு தான் வாழும்படியாக இருக்கும். இதை சிந்திப்போர்க்கு வாழ்வு சிறக்கும் சந்திப்போர்க்கு வாழ்வு கசக்கும்..ஆகவே அன்பர்களே போதை, புகையிலை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பழக்கத்தை இன்றே கைவிடுங்கள் பொன்னான வாழ்வுக்கு பிள்ளைச் செல்வம் பெற்று சன்னதிகளை பெருக்கிடுங்கள்.
மதுவும்,புகைப்பழக்கமும்,மற்றபிற போதைப்பழக்கமும் வீட்டிற்கும் நாட்டிற்கும் மட்டும் கேடல்ல. உயிரை உருவாக்கும் உயிரணுவுக்கும்தான் என்பதை ஒவ்வொரு [ குடி ] மகனும் உணரவேண்டும். தனது வாரிசை மகிழ்வுடன் உருவாக்க இத்தகைய பழக்கத்தை கைவிட வேண்டும்.!!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval