Monday, October 5, 2015

மத வன்முறைகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

mha_nctc_home_ministry
மத வன்முறைகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தாத்ரி சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் இக்லக் (வயது 50) என்பவரின் குடும்பத்தினர் மாட்டு இறைச்சி சாப்பிடுவதாக வதந்தி பரவியதால் ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் இக்லக் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் நடந்த 330 மத வன்முறை சம்பவங்களில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் தான் 68 சம்பவங்கள் நடந்துள்ளன.
மத்திய அரசு உத்தரவு
தாத்ரி சம்பவம் குறித்து உத்தரபிரதேச மாநில அரசு அறிக்கை அளிக்கும்படி கடந்த 1–ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கும்படியும் அதில் கூறப்பட்டது. இதுவரை அம்மாநில அரசு அதற்கு பதில் அளிக்காததால், நேற்று ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் மத்திய உள்துறை அனுப்பியது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு உத்தரவு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:–
கடும் நடவடிக்கை
சட்டம்–ஒழுங்கு பிரச்சினை அடிப்படையில் மாநில அரசின் கீழ் வருகிறது. ஆனாலும் உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் நடந்த எதிர்பாராத சம்பவம் உள்பட நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்துவரும் மத வன்முறை சம்பவங்கள் மத்திய அரசுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
நாட்டின் மதசார்பற்ற தன்மையை பலவீனப்படுத்தும் வகையில் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் தூண்டிவிடும் எத்தகைய முயற்சிகளையும் மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய சக்திகள் மீது எந்த சமரசமும் இல்லாமல், அவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval