கோடைக்காலம் என்றாலே தண்ணீர் தட்டுப்பாடு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. நீராதாரங்கள் வறண்டு விடுவதால் பல இடங்களில் குடிநீருக்கும், விவசாயத்துக்குமே தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், கையிருப்பில் உள்ள நீராதாரத்தை சொட்டு நீர்ப் பாசனம் மூலம் பயன்படுத்தி அதிக விவசாய உற்பத்தியையும், தண்ணீர் சேமிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளனர் கோவை, நரசீபுரம் கிராம மக்கள்.
கோவையின் மேற்குப் பகுதியில், உள்ள கிராமப் பகுதி நரசீபுரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் நீராதாரங்கள் ஓரளவுக்கு கிடைத்தாலும், நிலத்தடி நீரையே பெரும்பாலும் இங்குள்ள விவசாயிகள் நம்பியுள்ளனர். மஞ்சள், வாழை, வெங்காயம், கத்தரி, வெங்காயம், மிளகாய், தக்காளி, காளிபிளவர் உள்ளிட்ட காய்கறி வகைகளும், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளும் இங்கு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
குறைந்த நீரில் அதிக மகசூல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் வட்டாரத்துக்கு இந்த நரசீபுரம் கிராமத்தை தோட்டக்கலைத்துறை கடந்த 2012-13-ம் ஆண்டில் தேர்வு செய்தது. சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி, இன்று 100 சதவீத இலக்கை நோக்கி கிராம விவசாயிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இங்கு மொத்தமுள்ள 181 ஹெக்டேர் விவசாயப் பரப்பில், 150 ஹெக்டேரில் தோட்டக்கலைத்துறை பயிர்களும், 31 ஹெக்டேரில் வேளாண் துறை சார்ந்த பயிர் வகைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலான விவசாயிகளும் தற்போது சொட்டு நீர்ப் பாசனத்தையே நம்பியுள்ளதால், ஆண்டுதோறும் குறைந்தது 25 சதவீத தண்ணீரை மிச்சப்படுத்தி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கோடையிலும் விளைச்சல்
விவசாயி கே.ரகுராமன் என்பவர் கூறும்போது, ‘நரசீபுரம், வெள்ளிமலைப் பட்டினம் கிராமங்களில் பெரும்பகுதி விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்திலேயே விவசாயம் செய்கிறோம். மீதமிருந்த ஒன்றிரண்டு மானாவாரி விவசாயிகளும் தற்போது இந்த முறைக்கு மாறிவிட்டனர். இதனால் குறைந்த 25 சதவீதத்திலிருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை தண்ணீரை மிச்சப்படுத்த முடிகிறது. தண்ணீர் பாய்ச்சத் தேவையான வேலைகள் குறைவு, ஆட்கள் வேலை குறைவு, உரத்தை எளிதாக, வீணாக்காமல் செடிகளுக்கு செலுத்த முடியும். களைச் செடிகளும் குறையும். எப்படிப் பார்த்தாலும் நீர் மிச்சப்படுத்துவதோடு, விவசாயக் கூலி செலவையும் நாங்கள் மிச்சப்படுத்தி வருகிறோம். கோடைக்காலத்திலும் சொட்டுநீர் பாசனம் இருப்பதால் மஞ்சள், வெங்காயம், முட்டைகோஸ், மிளகாய் பயிர்களை பயிரிட்டு, நல்ல உற்பத்தியை ஈட்டி வருகிறோம்’ என்றார்.
மேலும் சில விவசாயிகளிடம் கேட்டபோது, ‘நரசீபுரம் கிராம சுற்றுவட்டாரத்தில் 139 விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள் கிடைப்பதால் எந்த சிரமும் இல்லை. சாதாரண முறையில் 1 ஏக்கருக்கு பயன்படும் நீர், சொட்டுநீர்ப் பாசனத்தில் 3 ஏக்கருக்கு பயன்படுத்துகிறோம். குறிப்பாக கோடைக்காலத்தில் நீர்நிலைகளில் நீர் குறைந்தாலும், போர்வெல்களில் கிடைக்கும் குறைந்தபட்ச நீர் போதும். எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறோம்’ என்கின்றனர்.
தோட்டக்கலைத் துறையினரிடம் கேட்டபோது, ‘மாதிரி விவசாய கிராமமாகத் தேர்வு செய்து எடுக்கப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். எந்த மாதிரியான காலநிலை என்றாலும் விவசாயத்துக்கு இங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது’ என்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval