Friday, April 22, 2016

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் கேரளாவில் அறிமுகம்


திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி உடல் உறுப்பு  மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  தற்போது இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உடல் உறுப்புகள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு  தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.  அருகருகே உள்ள இடங்களுக்கு சாலை வழியாக உடல் உறுப்புகளை கொண்டு செல்வதில்  சிரமமில்லை. ஆனால் வெகுதொலைவில் உள்ள நோயாளிகளுக்கு உடல் உறுப்புகளை உடனடியாக கொண்டு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விமானம்  மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது இந்தியாவில் இந்த சேவையில் தனியார் விமான நிறுவனங்கள் தான் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள அரசு ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் இந்த  திட்டத்தை கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக திருவனந்தபுரத்திலுள்ள ராஜிவ்காந்தி விமான தொழில்நுட்ப அகாடமியுடன் கேரள  அரசு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் உம்மன்சாண்டி முன்னிலையில் நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval