கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவதிப்பட நேரிடும். நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த, வெட்டிவேர் உஷ்ண நோய்களை விரட்டும் வெற்றிவேராகவே இருக்கிறது. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வெட்டிவேர், பார்ப்பதற்குத் தேங்காய் நார் போல இருக்கும். இது, பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. டெங்கு காய்ச்சல் குணமாகப் பயன்படுத்தப்படும் நில வேம்புக் கஷாயத்தில், வெட்டிவேர் ஒரு முக்கிய மருத்துவப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. பல வாசனை வஸ்த்துக்களிலும் வெட்டிவேர் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெட்டிவேரைத் தண்ணீரில் ஊறவைத்துப் பருகலாம். இரண்டு முதல் எட்டு கிராம் வெட்டிவேர் பொடியை, 250 மி.லி பானைத் தண்ணீரில் ஊறவிட்டு, இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, வடிகட்டிப் பருகலாம். 10-12 மணி நேரத்துக்குள், இந்த நீரைப் பயன்படுத்திவிட வேண்டும். மீண்டும், புதிய நீர் மற்றும் வெட்டிவேர் பொடியைப் பயன்படுத்தலாம். இதற்கு, வெட்டிவேர் ஊறல் நீர் என்று பெயர்.
வெக்கை சூட்டைத் தணிக்கும். அபரிமிதமான தாகத்தைத் தணிக்கும். உடலுக்கு, குறிப்பாகக் கண்களுக்குக் குளிர்ச்சிதரும். அஜீரணம், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பானப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.
மூல நோய், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் அருந்த ஏற்றது. சிறுநீரைப் பெருக்கும். வியர்வையை உண்டாக்கும்.
தொடர்ந்து பயன்படுத்திவர, மஞ்சள்காமாலை, காய்ச்சல், ஆண்மைக்குறைவு, கட்டி, கண்நோய் போன்றவை குணமாகும். அம்மை நோய்கள் அண்டாது.
வெட்டிவேரைப் பொடியாக்கி, தண்ணீரில் குழைத்து, சருமத்தில் தடவிவர, உடல் எரிச்சல் நீங்கி, சருமம் பொலிவு அடையும். வெயிலால் வரும் சரும நோய்கள் நீங்கும். தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலையில் தேய்த்துவந்தால், உஷ்ணம் குறையும்.
திப்பிலி, வெட்டிவேர் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, நெய் சேர்த்து, சூரணம்போல் உருட்டிச் சாப்பிட்டு, சிறிது வெந்நீர் பருக, நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி தீரும்.
அரை டீஸ்பூன் வெட்டிவேர் பொடியுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிக்கட்டிப் பருகிவர, காய்ச்சல் குறையும்.
பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சளுடன் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, குளியல் பொடியாகத் தயாரிக்கலாம். இந்தப் பொடியை, தினமும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் குணமாகும். சிறந்த மணமூட்டியாகவும் செயல்படும்.
வெட்டிவேர் விற்பனைக்கு!
வெட்டிவேரில் செருப்பு, மாலை, தோரணம் எனப் பல்வேறு பொருட்கள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. முன்பு வெயில் காலத்தில், வெட்டிவேர் விசிறி அதிக அளவில் விற்பனையாகும். வெயில் காலத்தில் அதன்மீது நீர் தெளித்து, விசிறிக்கொண்டால், உடல் எரிச்சல், நா வறட்சி, மன சஞ்சலங்கள் மறையும். தற்போது, ஏ.சி, ஏர் கூலர் என மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, வெட்டிவேரும் ‘விண்டோ ஸ்க்ரீனாக’ அவதாரம் எடுத்துள்ளது. ஜன்னல் வழியே வரும் காற்று, ஈரமான வெட்டிவேர் ஸ்க்ரீன் மீது படும்போது, வெயிலுக்கு இதமாகக் குளிர் காற்றினைத் தருகிறது. நல்ல வாசம் மன அழுத்தத்தை குறைக்கும்.
via-vikatan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval