Saturday, April 16, 2016

மாடித்தோட்ட மகிமை 8 ஆண்டுகளாக மார்க்கெட் போகாத குடும்பம்

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை,  மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகளையும், செடி வளர்க்கும் பைகளையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

மாடித்தோட்டத்தில் சிறப்பு என்னவென்றால், பாரம்பர்ய விதைகளையும், வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், பழங்களையும் வளர்க்க முடியும். எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த அம்சங்கள் இருப்பதால்தான் மாடித்தோட்டம் மக்களின் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது.

இதை உணர்ந்து இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தை சேர்ந்த பொறியாளர் ராதாகிருஷ்ணன்.
அவர் தன்னுடைய மாடித்தோட்டம் குறித்து பேசியபோது, "விவசாயம் எனக்கு பரம்பரைத் தொழில். அதனால் சிறு வயதிலிருந்தே செடிகள், உயிரினங்கள் மீது பிரியம் அதிகம். நான் படித்து முடித்து வெளிநாட்டில் பணியாற்றி வந்தேன். திரும்பவும் இங்கே வந்து சொந்த வீடு கட்டினேன். கட்டும் பொழுதே மொட்டை மாடியில் 600 சதுர அடியில் மாடித்தோட்டம் அமைத்துவிட்டேன்.
ஆரம்பத்தில் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய காய்கறிகளை பயிரிட்டு அறுவடை செய்து சாப்பிட்டு வந்தேன். அந்த காய்கறிகளின் சுவைக்கும், மார்கெட்டில் வாங்கும் காய்கறிகளின் சுவைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தேன். பிறகு, வீட்டுக்குத் தேவைப்படும் அனைத்து காய்கறிகள், பழங்களையும் நானே பயிர் செய்ய ஆரம்பித்தேன்.

இப்போது 6 வகையான அவரைக்காய்கள், நான்கு வகையான கத்திரிக்காய்கள் என்று பயிர் செய்கிறேன். பழங்களில் மாதுளை, தர்ப்பூசணி, பப்பாளியும், காய்கறிகளில் சுரைக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் என்றும் பயிர் செய்கிறேன். அம்மான்பச்சரிசி, பூனைமீசை, முடக்கத்தான், தவசிக் கீரை, ஆடாதொடா, மஞ்சள் கரிசலாங்கண்ணி, விபூதிபச்சிலை, மருதாணி, வெற்றிலை என மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறேன்.

கடந்த 8 ஆண்டுகளாக, எங்கள் இல்லத்தில் மார்க்கெட்டில் போய் காய்கறிகளை வாங்கி பயன்படுத்துவது இல்லை. அரிசி, பருப்பு, எண்ணெய் ஊரிலிருந்து வந்துவிடும். நான் இங்கே உணவுக்கு தேவையான கீரை, காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்கிறேன். மொத்தத்தில் எங்கள் குடும்பமே முற்றிலும் இயற்கையான மாடித்தோட்டத்தில் விளையும் காய்கறிகளை உண்டு வாழ்ந்து வருகிறோம்” என்றவர் தொடர்ந்தார்.
மாடித்தோட்டத்துக்கு முதலில் பொறுமையும், இயற்கையின் புரிதலும் அவசியம்.
காலையில் எழுந்த உடனே மாடியில் இருக்கும் செடிகளை பராமரிப்பதுதான் என் முதல் வேலை. செடிகளில் பூச்சி தாக்குதல் இருந்தால், அந்த பகுதிகளை தண்ணீரில் நன்றாக அலசி வேப்ப எண்ணையை நோய்த் தாக்கமுள்ள பகுதிகளில் தெளிப்பேன். இதற்கும் நோய்த்தாக்குதல் குணமாகவிடில், பஞ்சகவ்யாவை தெளிப்பேன்.

செடிகளில் நோய்த்தொற்றுகளை மட்டும் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டால் போதும். மாடித்தோட்டம் எளிமையான ஒன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் என் மனைவியும், குழந்தைகளும் கூட மாடித்தோட்டத்தை பாசமாக பார்த்து கொள்கிறார்கள். நான் கவனிக்காமல் விட்டாலும் அவர்கள் செடிகளின் நோய்த்தாக்குதலை கண்டுபிடித்து விடுவார்கள்.

செடிகளுக்கு தொட்டியை தயார் செய்யும்போது, மண்புழு உரம், தேங்காய் நார், வேப்பம் புண்ணாக்கு கலப்பேன். இந்த கலவையில் செடிகளை வைக்கும்போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். விளையும் காய்கறிகளும் இயற்கையானதாக இருக்கும். கட்டுமான தொழிலில் இருப்பதால் வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறேன். ஆர்வம் உள்ளவர்களுக்கு வீட்டில் தோட்டம் அமைக்கவும் உதவி செய்து வருகிறேன்" என்கிறார்.
courtesy;vikdan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval