நம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் விதமாக வீட்டுத்தோட்டங்கள் அமைத்து வருகிறார்கள் பலரும். அந்த வகையில், தனது வீட்டின் தரைப்பகுதியில் புறக்கடைத் தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட சாகுபடியை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் பகுதியைச் சேர்ந்த பிரேமா நடராஜன்.
மாலைவேளையில் வீட்டுத்தோட்டத்தில் அவரைச் சந்தித்தோம். உடன் இருந்த தாயார் மற்றும் சகோதரியை அறிமுகம் செய்து வைத்து விட்டு பேசத்தொடங்கினார் பிரேமா.
‘‘நான் பிறந்து வளர்ந்தது ஓசூர். கல்யாணத்துக்குப் பிறகு வாழ்ந்த ஊர் சேலம். அரசு ஊழியரான கணவரின் பணி ஒய்வுக்குப் பிறகு அவரோட சொந்த ஊரான அலங்கியம் வந்திருக்கோம். சின்ன வயசில் இருந்தே எனக்கு விவசாயத்தின் மீது தீராத ஆர்வம். விவசாயம் சம்பந்தமான எந்தப் புத்தகம் கண்ணில் பட்டாலும் அதை வாங்கி படிச்சிடுவேன். எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பேன். படிச்சு முடிச்ச புத்தகங்களைச் சேகரிச்சும் வெச்சிருக்கேன். அதை மறுவாசிப்பு செய்ற வழக்கமும் உண்டு. எதிர்காலத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்ங்கிற கனவு என் மனசுல ஒடிக்கிட்டே இருந்திச்சு. அந்த சமயத்தில்தான் ‘பசுமை விகடன்’ அறிமுகம் ஆச்சு. அதுல வந்த கட்டுரைகள் என்னை ரொம்பவும் ஈர்த்திடுச்சு. விவசாயம் செய்யணும்ங்கிற கனவில் இருந்த என்னை, இயற்கை விவசாயம் செய்தே ஆகணும்ங்கிற வெறியை ஏற்படுத்துனது ‘பசுமை விகடன்தான்’. திருப்பூர், உடுமலைப்பேட்டை, கொடுவாய்னு பக்கத்துல நடந்த இயற்கை விவசாயக் கருத்தரங்குகள்ல கலந்துக்கிட்டு பல தகவல்களைச் சேகரிச்சேன். அதில் இயற்கை விவசாயம், வீட்டுத்தோட்டம் பற்றியும் தெரிஞ்சுக்கிட்டேன்.
திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு நாள் விவசாயி!
இந்த சமயத்துலதான் பசுமை விகடன் மூலமா, ‘ஒருநாள் விவசாயி’ களப்பயிற்சியிலயும் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. கரூர்ல சம்பங்கி விவசாயி மனோகரன் பண்ணையில் நடந்த பயிற்சியில் பங்கேற்று, பல தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சிக்கிட்டதோட, வயலில் இறங்கி வேலை பாத்த அனுபவம் எனக்கு, விவசாயத்து மேல உள்ள ஈர்ப்பை அதிகப்படுத்திச்சு.
நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியலையேனு கவலைப்படத் தேவையில்லை. ஏக்கர் கணக்கில் செஞ்சா மட்டும்தான் விவசாயமா? அதை சதுர அடிக்கணக்கில் கூட செய்ய முடியும்னு பசுமை விகடனில் வெளியான வீட்டுத்தோட்ட கட்டுரைகள் உணர்த்திச்சு. மாடித்தோட்டம் அமைக்க இடவசதி இல்லாததால புறக்கடைத் தோட்டம் அமைச்சேன். வீட்டு பின்பகுதியில் 450 சதுர அடியில் இதை அமைச்சிருக்கேன். 100 பைகள்ல பலவிதமான செடிகளை நட்டு வளர்த்துக்கிட்டு வர்றேன்.
உரத்தொட்டி அது உயிர்த்தொட்டி!
செடிகளில் இருந்து உதிரும் இலைதழைகளைக் கூட்டி சேகரிச்சு, புறக்கடையில் இருக்கற உரத்தொட்டியில் போட்டு மூடிவைச்சிடுவோம். இன்னோர் தொட்டியில் காய்கறிக்கழிவுகள், மீதமான உணவுப்பொருட்களைப் போட்டு மூடி வைப்போம். நல்லா மட்கிய பிறகு எடுத்து செடிகளுக்கு உரமாகக் கொடுப்போம். நல்ல மகசூல் கிடைக்கும்.
உயிர் உரம் அவசியம்!
சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா... உயிர்ப் பூஞ்சணக் கொல்லிகளையும், அசோஸ்பைரில்லம்ங்கிற உயிர் உரத்தையும் தலா 100 கிராம் வீதம் இயற்கை உரங்களுடன் கலந்து கொடுத்துக்கிட்டு வர்றோம். ஒவ்வொரு செடிக்கும் என்ன உரம்? எந்த எந்த நாள் கொடுத்தேன்ங்கிறதை எல்லாம் டைரியில் தவறாம குறிச்சு வெச்சிடுவேன். அந்தக் குறிப்புகள் அடுத்த போக வெள்ளாமைக்கு உதவியா இருக்கும். அதேபோல, இடுபொருட்கள் தயாரிப்பு, விதைத் தேர்வு, நடவு, களை, பாசனம், உரம், பூச்சிவிரட்டி தெளிப்பு, பூக்கும் பருவம், பிஞ்சுப்பருவம், காய்ப்புப்பருவம், அறுவடைநாள்னு எல்லாத்தையும் எழுதிடுவேன். இன்னும் சில வருஷம் கழிச்சு, என் ‘வீட்டுத்தோட்ட டைரிக்குறிப்பு’ங்கிற தலைப்புல அதை தொகுத்து புத்தகமா வெளியிடும் யோசனையும் இருக்கு.
என் வீட்டில வளரும் ஒவ்வொரு செடியும் எனக்கு குழந்தைதான். அவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக்கிட்டு வர்றேன். செடிகளை ஒரு சிறு நோய் தாக்கினாலும் என் மனசு தாங்காது. உடனே வைத்தியம் பாத்துடுவேன். காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில பூவாளி பாசனத்துலதான் பாசனம் செய்றேன். பூச்சி, புழுக்கள், பூஞ்சணங்கள் தாக்குதலை மூலிகைப் பூச்சிவிரட்டி மூலமா சமாளிக்கிறேன்.
செலவும் சேமிப்பும்!
இந்தப் புறக்கடை வீட்டுத்தோட்டம் அமைக்க, நான் செய்த தொகையை செலவுனு சொல்லமாட்டேன். என் வாழ்நாள்ல செய்த பெரும் முதலீடுனுதான் சொல்லணும். இந்தத் தோட்டத்தை அமைக்க, எனக்கு பதினோராயிரம் ரூபாய் செலவாச்சு. இந்தத் தோட்டத்தில் விளையுற காய்கறிகளால எங்க மாதச்செலவு கணிசமாக குறையுது. அதேசமயம் ஆஸ்பத்திரி செலவும் குறைஞ்சிடுச்சு. இந்தப் புறக்கடைத் தோட்டத்தின் மூலமா கிடைக்கிறது சிறிய சேமிப்புதான்... ஆனா மனநிறைவு, உற்சாகம் ரெண்டும்தான் பெரிய சேமிப்பு’’ என்றார் மகிழ்ச்சியாக.
வகை வகையாய் செடிகள்!
‘‘நொச்சி, துளசி, கற்பூரவல்லி, இன்சுலின், தவசிக்கீரை, கீழாநெல்லி, பிரண்டை உள்ளிட்ட ஏழு வகை மூலிகைச் செடிகளும், கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, கொத்தவரை, பீட்ரூட், முள்ளங்கி ஆகிய ஏழு வகை காய்கறிகளும், பீர்க்கன், புடலை, வெள்ளரி, பாகல், சுரை போன்ற அஞ்சு வகை கொடிப்பயிர்களும் எங்க தோட்டத்துல இருக்கு. கூடவே, பாலக்கீரை, புளிச்சக்கீரை, சிவப்புத்தண்டுக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரைன்னு ஆறு ரக கீரைகளும், பப்பாளி, மாதுளை, எலுமிச்சைனு மூணு பழ வகையும் ரோஜா, செம்பருத்தி, நித்யகல்யாணி, நந்தியாவட்டை, அரளி, டேலியானு ஆறு வகை பூக்களும் என் தோட்டத்துல இருக்கு’’ என பட்டியலிடுகிறார் பிரேமா.
இடுபொருட்கள் இயற்கையில்...!
புறக்கடைத் தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு முன்பாக, மண்கலவையை உருவாக்க வேண்டும். நல்ல வளமான மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சமஅளவு கலந்து, செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பையில் முக்கால் பங்கு நிரப்பி வைக்க வேண்டும். பைகளில் விதை அல்லது நாற்றுகள் என எது நடுவதாக இருந்தாலும், பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, விதைநேர்த்தி செய்த பிறகுதான் நடவேண்டும். வேர் சமபந்தமான நோய்களைத் தடுத்து தண்டு ஊக்கமாக வளர இது அவசியம். கொடி வகை மற்றும் பழச்செடிகள் நடுவதற்கு பெரிய அளவிலான பைகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள உபகரணங்களையும், இடுபொருட்களையும் பயன்படுத்தியேகூட எளிய முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.
செடியின் வளர்ச்சிக்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் இயற்கை உரங்ளைப் பயன்படுத்த வேண்டும். கடலைப் பிண்ணாக்கு, ஆட்டு எரு, தொழுவுரம் ஆகியற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை சரியான விகிதத்தில் கலந்து செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். தேவைப்படும்போது தலா 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கையும் கொடுக்கலாம். எறும்பு, எலி, வேர்க்கரையான் தாக்குதல்களில் இருந்து செடிகளைக் காப்பாற்ற இது அவசியம். மழைக்காலங்களில் செடிகளின் ஈரத்தன்மையைப் போக்க வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.
via-vikatan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval