சென்னை: தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான குழு இன்று தமிழகம் வருகை தர உள்ளது. தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழு வீச்சில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 692 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் இதுவரை 19 ஆயிரத்து 382 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனை நடவடிக்கைகளின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.20.04 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் 28 ஆயிரம் லிட்டர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சில பிரச்சினைக்குரிய மாவட்டங்களில் போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பொதுவாக, மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் 9 ஆயிரத்து 360 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை அதிக பதற்றம், பதற்றம் என்பதுபோன்ற அளவில் வகைப்படுத்தியுள்ளோம். அதிக பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படுவார்கள். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு இங்கு வருகிறது. அந்த குழுவில் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் உள்ளனர். அக்குழு இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 3.25 மணிக்கு வருகின்றனர். அங்கிருந்து சாலை வழியாக பயணித்து மாலை 6.30 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றனர். நாளை காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை புதுவையில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் காலை 10.15 முதல் 11.45 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சிறப்பு போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோருடன் கலந்தாலோசிக்கின்றனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னையை 9 பேர் குழு வந்தடைகிறது. சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் மத்திய கட்சிகள் கலந்துகொள்கின்றன. பின்னர் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பல அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். இரவில் ஓட்டலில் தங்குகின்றனர். பின்னர் 8-ந் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சிறப்பு போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து ஆலோசிக்கின்றனர். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
courtesy'oneindia
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval