Tuesday, April 5, 2016

நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் வாசன்: அதிருப்தியில் குமுறும் நிர்வாகிகள்

Italian ship firing: Vasan terms killing of Indian fishermen ...தமாகாவை உதறித் தள்ளிய அதிமுக

கூட்டணிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மீது அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த 2014 நவம்பரில் தமாகாவை தொடங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், வேலூர் ஞானசேகரன், எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர். ரங்கராஜன், ஜான் ஜேக்கப், முன்னாள் எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், பி.விஸ்வநாதன் என பலரும் தமாகாவில் இணைந்தனர். வாசன் முழுக்க முழுக்க அதிமுக ஆதரவாளராகவே செயல்பட்டார். இதனால் எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி ஏற்படும் நாமும் எம்.எல்.ஏ. ஆகி விடலாம் என தமாகாவில் பலர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், கூட்டணிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் தமாகாவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தமாகா மூத்த தலைவர் ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது: ஜி.கே.மூப்பனாரால் ஆளாக்கப்பட்ட நாங்கள் அவரது மகன் வாசன் தனிக்கட்சி தொடங்கியதும் அவரது பின்னால் அணி வகுத்தோம். இதனை செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக நாங்கள் கொடுத்த விலை என்று கூட சொல்லலாம். ஆனால், ஆரம்பம் முதலே எங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களை வாசன் எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கூட்டணி அமைப்பதில் எங்களை எந்த விதத்திலும் அவர் ஈடுபடுத்தவில்லை. ஜெயலலிதாவை முழுமையாக நம்பினார் வாசன். ஆனால் அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. நம்பி வந்த எங்களை நட்டாற்றில் நிறுத்திவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
எவ்வித கஷ்டமும் அனுபவிக்காமல் 8 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த வாசனால், அடுத்து என்ன நடக்கும் என யூகித்து அதற்கேற்ப முடிவெடுக்க முடியவில்லை என்கிறார் தமாகா முக்கிய நிர்வாகி ஒருவர். மேலும் அவர் கூறியதாவது: 5 ஆண்டுகள் ஆதரித்த வைகோவை கடைசி நேரத்தில் வெளியேற்றியவர் ஜெயலலிதா. கடந்த 2014-ல் பிரகாஷ் காரத், ஏபி பரதன் போன்ற இடதுசாரி தலைவர்கள் ஜெயலலிதா சந்தித்து கூட்டணியை அறிவித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அவர்களையும் ஏமாற்றினார். இதிலிருந்து பாடம் கற்க வாசன் மறந்து விட்டார்.
இப்போது கூட ஜெயலலிதா நம்மை அழைப்பார் என வாசனிடம் சிலர் சொல்லி வருகின்றனர். அதையும் அவர் நம்பி வருகிறார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததும் தமாகாவை திமுக அணுகியது. அதனை பயன்படுத்திக் கொள்ளவும் வாசன் தவறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய நிலையில் மக்கள் நலக் கூட்டணிக்கு செல்வதைத் தவிர வாசனுக்கு வேறு வழியில்லை. அந்த முடிவைக் கூட அவர் உடனடியாக எடுப்பாரா என்பது தெரியவில்லை என புலம்பி தீர்க்கின்றனர் தமாகா நிர்வாகிகள்.
courtesy;the hindu tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval