Wednesday, April 6, 2016

சார்ஜாவில் உயர் ரக கைக்கடிகாரம் மற்றும் நகை கண்காட்சி!

இந்த கண்காட்சி சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி அவர்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது. சார்ஜா எக்ஸ்போ சென்டரில் உயர் ரக கைக்கடிகாரம் மற்றும் நகை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடந்து வருகிறது. 40-வது முறையாக நடைபெறும் இந்த கைக்கடிகாரம் மற்றும் நகை கண்காட்சி செவ்வாய்கிழமை தொடங்கியது.
இந்த கண்காட்சியினை சார்ஜா துறைமுகம் மற்றும் சுங்க வரி துறை தலைவர் டாக்டர் ஷேக் காலித் பின் அப்துல்லா பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கண்காட்சியில் அமைந்துள்ள அரங்குகளை பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த அழகு மிகு நகைகளை பார்த்து வியந்தார்.
இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், இத்தாலி, தாய்லாந்து, சீனா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 30,000 சதுர அடி பரப்பளவில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகர்களை இந்த கண்காட்சி ஒருங்கிணைத்து வருகிறது. இதனால் வருடத்துக்கு வருடம் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஒவ்வொரு 500 திர்ஹாம் நகை வாங்குபவர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 8&ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் திறந்திருக்கும். இன்று புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பெண்கள் மட்டும் பார்வையிடலாம்.
இந்த விழாவில் சார்ஜா வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் அப்துல்லா பின் முகம்மது அல் ஒவைஸ், சார்ஜா எக்ஸ்போ சென்டர் தலைமை செயல் அலுவலர் சைப் முகம்மது அல் மித்பா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
courtesy;inneram.com

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval