Friday, April 8, 2016

ஸ்னாப் டீலின் தில்லுமுல்லு- ஏமாந்தவர்களின் சோகக்கதை!

 ஸ்னாப் டீல்' உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகின்றன. இதனை நம்பி ஆன்லைனில் புக்கிங் செய்யும் நபர்களுக்கு கடைசியில் பழுதான பொருட்கள் மற்றும் பழைய பொருட்களே பார்சலில் வருகிறது. இப்படி ஏமாந்தவர்தான் தூத்துக்குடியை சேர்ந்த லிங்கேஸ்வரன்.

'ஸ்னாப் டீல்' ஆன்லைன் மூலம் 4 ஆயிரம் மதிப்புள்ள டேப்லட்டை புக்கிங் செய்துள்ளார். கடந்த 29-ம் தேதியன்று,  லிங்கேஸ்வரனுக்கு டேப்லட்டை பார்சலில் அனுப்பியது அந்த நிறுவனம். பார்சலை பிரித்து டேப்லட்டை ஆன் செய்துள்ளார் லிங்கேஸ்வரன். அப்போது, டேப்லட் பழைய பொருள் என்று கண்டுபிடித்ததோடு, அதில் இந்த கேமிரா உள்ளிட்ட பல பாகங்கள் செயல்படவில்லை என்பதையும் தெரிந்துகொண்டார். இதைத் தொடர்ந்து 'ஸ்னாப் டீல்' நிறுவனத்தின் சேவை மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, "நாங்கள் அந்த பொருளை வாங்கிக் கொண்டு புதிய பொருள் தருகிறோம்"  என்று கூறியுள்ளனர்.

மேலும் டேப்லட்டை சர்வீஸ் செய்ய முகவரி ஒன்றை எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறது அந்த ஆன்லைன் நிறுவனம். அந்த முகவரியை தேடிச் சென்றால், அப்படி முகவரி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது லிங்கேஸ்வரனுக்கு. இதனால் மீண்டும் சேவை மையத்தை தாெடர்பு கொண்டுள்ளார். அப்போது, "நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி, மீண்டும் ஒரு சர்வீஸ் சென்டர் தொலைபேசி நம்பரை கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பரை லிங்கேஸ்வரன் தொடர்பு கொண்டபோது, இந்த நம்பர் தற்போது உபயோகத்தில் இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் மீண்டும் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, "நீங்கள் புகார் கொடுத்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதனால், நீங்கள் சென்னைக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்" என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளிக்க உள்ளதாக லிங்கேஸ்வரன் கூறியுள்ளார். பின்னர் அந்த நிறுவனம் சார்பில் லிங்கேஸ்வரனிடம் பேசப்பட்டது. இதனால் லிங்கேஸ்வரனுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஏமாந்ததுதான் மிச்சம்.

இதேபோல், 'ஸ்னாப் டீல்' ஆன்லைன் நிறுவனம் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ஏமாந்துள்ளார். இவர் கடந்த மாதம் ஆன்லைனில் மிக்சி புக்கிங் செய்துள்ளார். வீட்டிற்கு பார்சலில் வந்த பட்டர்பிளை மிக்சியை ஆசை ஆசையாய் வாங்கிக் கொண்டுள்ளார். அதனை பயன்படுத்த முயன்றபோது மிக்சி இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், ஸ்னாப் டீலின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். இவரும் 7 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் ஏமாற்றம் அடைந்துள்ளார். பழுதான மிக்சியை திரும்ப பெறாமல் அவரை ஏமாற்றி மோசடி செய்துள்ளது ஸ்னாப் டீல் நிறுவனம்.

இப்படி மோசடியில் ஈடுபடும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏமாந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval