Tuesday, April 19, 2016

திருப்பூர், தஞ்சையில்... 2 தொகுதிகளை மாற்றிக் கொள்ள காங்.குடன் பேசும் திமுக?


DMK - congress may exchange constituencyசென்னை: காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் மற்றும் தஞ்சையில் தலா ஒரு தொகுதிகளை மாற்றிக் கொள்ள திமுக, அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக - காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்தவாரம் திமுக தேர்தல் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி அறிவித்தார். ஆனால், சில இடங்களில் வேட்பாளர்களை மாற்றக்கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில வேட்பாளர்களையும் திமுக மாற்றி வருகிறது. அந்தவகையில், நேற்று மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சோழவந்தான் தனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீபிரியா தேன்மொழி மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் புதிய வேட்பாளராக பவானி அறிவிக்கப்பட்டார். இவர் முன்னதாக, அரக்கோணம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டவர் ஆவார். இந்நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தலா ஒரு தொகுதியைத் திரும்பப் பெற திமுக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் பட்டுக்கோட்டையையும், திருப்பூரில் காங்கேயம் தொகுதியையும் கைப்பற்ற திமுக விரும்புவதாகத் தெரிகிறது. காரணம் அந்தத் தொகுதிகளில் திமுகவின் செல்வாக்கு அதிகமாக இருப்பதே ஆகும். இதற்குப் பதிலாக அதே மாவட்டங்களில் வேறு தொகுதிகளை ஒதுக்கவும் திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த உடன்பாட்டிற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் விரைவில் திமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம் வரலாம் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அரவக்குறிச்சியை காங்கிரஸிற்கு ஒதுக்காமல் திமுக எடுத்துக் கொண்டது தொடர்பாக ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியை காங்கிரஸிற்கு விட்டுத்தர திமுக சம்மதம் தெரிவித்ததாகவும், அத்தொகுதியில் குஷ்பு களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், அதற்கு காங்கிரஸ் உடன்படவில்லை. ஆர்.கே.நகருக்கு பதில் அரவக்குறிச்சியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகும் கேட்டதாகவும், ஆனால் அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
courtesy;onwindia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval