Saturday, April 2, 2016

ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தல்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள்

மிழகத்தில் மிகப்பெரிய அளவில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் நடந்துவருவதாகவும், கடந்த காலங்களைவிட இது அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் இரண்டு குழந்தைகள் காணாமல் போவதாகவும், இந்த ஆண்டு, மார்ச் மாதம் வரை மட்டும் 271 குழந்தைகளைக் காணவில்லை என்றும் புகார்கள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை கடத்தல் சம்பவங்களை அவ்வளவு எளிதான விஷயமாக நாம் கருதிவிட முடியாது. இதன் பின்னணியில், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் மிகப்பெரிய கும்பல்கள் மறைமுகமாக 'பக்கா கடத்தல்' பிசினஸை செய்து கொண்டிருக்கின்றன. அதிர்ச்சியூட்டும் இந்த குழந்தைகள் கடத்தல் தொழில்  உள்ள பின்புலங்களை விளக்குகிறார், குழந்தைகள் நல சமூக சேவகர் ஒருவர்.

" பிச்சையெடுக்கவும், பாலியல் தொழிலிலுக்கும், சட்டத்திற்கு புறம்பான தத்துக் கொடுத்தலுக்கும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலுக்கும், கொத்தடிமைகளாக வேலை செய்யவும், உடல் உறுப்புகளை திருடவும் என பல  கொடூர வியாபாரத்திற்காகக்  குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பிளாட்பாரங்களும், அரசு மருத்துவமனைகளும்தான் குழந்தைகளை கடத்தும் கும்பலின் முக்கியமான டார்கெட் இடங்கள்.
பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தைகளாக இருப்பின் அவர்கள் கட்டாயம் சட்டவிரோத தத்தெடுத்தலுக்கும், 10 வயதிற்கு மேற்பட்ட பெண் சிறுமிகள் கடத்தப்பட்டால் பாலியல் தொழிலுக்காகவும்தான் இருக்கும். ஒவ்வொரு ஆண், பெண் குழந்தைகளும், உடல் அமைப்பினையும், அழகினையும், வயதையும் பொறுத்து 'ரேட் ஃபிக்ஸ்' செய்யப்படுகிறது. ஆயிரத்தில் இருந்து பல லட்சம் வரை நடக்கும் ரேட் ஃபிக்ஸிங்கில், தொழிலதிபர்களின் குழந்தைகளுக்கு கோடியில் ரேட்ஃபிக்ஸ் செய்கிறார்கள். கடத்தப்பட்ட குழந்தைகளை சில மணிநேரத்திற்குள் மாநில எல்லைகளுக்கு கொண்டு சென்று, அடுத்த பார்ட்டிக்கு கைமாற்றிவிடுகின்றனர். பிணையமாக கடத்தப்படுவதைத் தவிர்த்து, வேறு காரணங்களுக்காக ஒரு குழந்தை கடத்தப்பட்டால், 80 சதவீதம் அக்குழந்தையை மீட்பது கடினம்தான்.

குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் 656 குழந்தைகள் கடத்தப்படுள்ளனர். இதில் 305 பேர் பெண் குழந்தைகள். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 271 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

நாம் அன்றாடம் பயணிக்கும் சாலைகளில், பச்சிளம் குழந்தைகளை மடியில் கட்டிக்கொண்டு பிச்சையெடுக்கும் கும்பலின் பின்னணியில்தான், மிகப்பெரிய கடத்தல் கும்பல் மறைந்திருக்கிறது. பிச்சையெடுப்பவர்கள் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு, போதை மருந்துகளைக் கொடுத்து எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். இதன்மூலம், மக்களின்  கருணை பார்வையை அவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

குழந்தைகள் கடத்தலை தடுக்க 2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, ஊராட்சி மன்ற அளவிலான கண்காணிப்பு குழு செயலிழந்து இருப்பதுதான், தற்போது அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு காரணம். அரசுக்கு,  குழந்தைகள் கடத்தல் சம்பம் பெரிய பிரச்னையாகவே தெரியவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், குழந்தைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதுதான். குழந்தைகளுக்கும் வாக்குரிமை இருந்திருந்தால், உடனடியான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கும். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரை மூன்று ஆண்டுகளாக அரசு நியமிக்காமல் இருப்பதே, இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு எத்தகைய அக்கறை இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 

மேலும், பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் குழந்தைகளை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளுங்கள் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால், பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களுக்கு எத்தகைய பாதுகாப்புமே இல்லை என அரசுக்கு நன்றாகவே தெரியும். மாறாக அவர்களை பிளாட்பாரத்திலேயே வசிக்கும் பொருளாதார நிலையில் வைத்திருக்கும் அரசின் நிர்வாக திறமையை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. 

குறிப்பாக, அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இருப்பது போல,  பெண்கள் மற்றும் குழந்தைகள்   நலனுக்கான தனி அமைச்சகத்தை தமிழகத்திலும் அமைத்து குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளைக்  கடத்தும் கும்பல், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களை சீசனுக்கு ஏற்ப மாற்றி குழந்தைகளைக்  கடத்தி வருகிறது. இவர்களின் தற்போதைய டார்கெட், கோடை வாசஸ்தலங்கள். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பெற்றோர் தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் " என அறிவுறுத்துகிறார் குழந்தைகள் நல சமூக சேவகர். 
- கு.ஆனந்தராஜ்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval