Sunday, April 17, 2016

நம்ம கடை!! கல்லூரியில் ஒர் இயற்கை அங்காடி!!!


கல்லூரி மாணவர்கள் என்றாலே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைத்தான் விரும்பி உண்பார்கள். அவர்களின் தேவைக்கேற்பவே கல்லூரிகளில் உணவகங்களும் செயல்படும். அதற்கு நேர்மாறாக, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பாரம்பர்ய உணவுகளின் அருமைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில்... ‘நம்ம கடை’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களும் பாரம்பர்ய உணவை விரும்பி உண்கிறார்கள். 

அக்கல்லூரிக்கு நாம் சென்ற போது... ‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே!’, உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது’ - என்ற ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் வரிகள் அடங்கிய பெயர் பலகை நம்மை வரவேற்றது. மாணவர்கள் தினை, சாமை, வரகு, கேழ்வரகு, கம்பு, சோளம் என சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட தின்பண்டங்களை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

தயக்கத்தை உடைத்த ருசி!

விற்பனையகத்தின் இயக்குநரான சமூகவியல்துறைப் பேராசிரியர் அருட்தந்தை ஆன்ட்ருஸ், நம்ம கடையின் நோக்கம் குறித்து நம்மிடம் பேசினார். “நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தவை. நம் மரபுமுறை உணவுகள், வெறும் பசியைப் போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அருமருந்தாகவும் பயன்படுகின்றன. ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாகவும் வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாகவும் மாறி வருகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான், இந்த நிலை. நமது அரசாங்கம் பணப்பயிரை நோக்கியே விவசாயிகளை, திசை திருப்பியதால், நமது பாரம்பர்ய உணவுகள் அழிந்து வருகின்றன.

ஆதித்தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்தது. தற்போது நாம் சாப்பிடும் உணவு வகைகள் குறித்தும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட பாரம்பர்ய உணவு வகைகள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த உணவகத்தைத் தொடங்கினோம். தொடக்கத்தில் தயக்கம் காட்டிய மாணவர்கள், இவற்றின் ருசியை அறிந்த பிறகு ஆர்வமாக வாங்கி உண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்” என்ற ஆன்ட்ருஸ் தொடர்ந்தார்.

“கல்லூரிப் பேராசிரியர்களும் சாமை, தினை, வரகு அரிசிகளை வீட்டுக்கு வாங்கிச் செல்கிறார்கள். அவர்களில் பலர், சிறுதானிய உணவுகளை உண்பதால், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்லும் போது, மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இயற்கை உணவு முறையில் ஆர்வமுள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியின் பொருளாதாரத்துறை ஆசிரியர், ஜெகன் பாரம்பர்ய உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தயாரித்துக் கடையில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.

தமிழர் உணவு நீண்ட நெடிய மரபுடையது. இனக்குழுச் சமூகத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்கள் மெல்ல மெல்லத் தனது அடையாளத்தை இழக்கத்தொடங்கியதன் விளைவுதான்... உணவே மருந்தாக இருந்த காலம் ஒழிந்து மருந்தையே உணவாக உட்கொள்ளும் நிலைஇப்போது ஏற்பட்டுள்ளது. இது கேலிக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்” என்ற ஆன்ட்ருஸ் நிறைவாக, “பஜ்ஜி, போண்டா, வடை, பர்கர், பீட்சா, கேக், பன் போன்றவற்றை உண்டு கொண்டிருக்கிற மாணவர்களை ‘நம்ம கடை’ மாற்றியிருக்கிறது.

மாணவர்கள் இயற்கை உணவு முறைக்கு மாறினால், பெரிய அளவில் அடுத்த தலைமுறைக்கு மாற்றத்தை உண்டு பண்ண முடியும்” என்றார்.

courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval