இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பின்பற்றிய புதிய முறை இயற்கை ஊட்டக் கரைசல்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை ஊட்டக் கரைசல்களைத் தயாரிக்கும் அந்த மூன்று முறைகளையும் பார்ப்போம்.
அமுதக் கரைசல்
இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. 24 மணி நேரத்தில் நமக்கு ஒரு வளர்ச்சி ஊக்கிக் கிடைக்கும். இதற்குச் செய்யவேண்டியது மிகச் சிறிய அளவு வேலைதான்.
முதலில் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ மாட்டுச் சாணம், இத்துடன் 250 கிராம் பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்) இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
செய்முறை:
முதலில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்க வேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.
கரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்துவிட்டனவா என்று பார்த்துவிட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு, 10 லிட்டர் என்ற அளவில் (1:10 அல்லது 10 %) நீர் சேர்த்துச் செடிகளுக்கு அடிக்க வேண்டும்.
அடர் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது. நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசை தெளிப்பான் பயன்படுத்தலாம். இந்தக் கரைசல் உடனடியாகத் தழை ஊட்டத்தை இலை வழியாகச் செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது.
பஞ்சகவ்யம்
பசுவின் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துச் செய்யும் கலவை இது.
பசுமாட்டு சாணம் ஐந்து கிலோ, மாட்டுச் சிறுநீர் ஐந்து லிட்டர், 15 நாட்கள் புளிக்க வைத்த தயிர் இரண்டு லிட்டர், பால் இரண்டு லிட்டர், நெய் 500 மி.லி. இவற்றுடன் பனங்கருப்பட்டி ஒரு கிலோ, அரசம் பழம் ஒரு கிலோ ஆகியவை தேவை.
செய்முறை:
சாணத்தையும் உருக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து நான்கு நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் சிறு நீரையும் தேவையான அளவு நீரையும் சேர்த்து மண்பானையில் ஊற விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு, நாள்தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16-ம் நாள், 15 நாள் (தனியாக) புளித்த தயிரையும் பாலையும் இத்துடன் பனங்கருப்பட்டியையும் கலந்து பாத்திரத்தில் கரைத்துவிட வேண்டும். மேலும் ஏழு நாட்கள் ஊறவிட வேண்டும். நாள்தோறும் மூன்று முறை கலக்கிவர வேண்டும்.
இருபத்திரண்டு நாட்களில் ஆவூட்டம் மிகச் சிறந்த மணத்துடன் கிடைக்கும். இதை ஒரு லிட்டர் எடுத்து, 35 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து (2% முதல் 3%)தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்துவிடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது, வளர்ச்சியைத் தூண்டிவிடுகிறது. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யா என்ற பொருள் ஊற வைக்கப்படுவதில்லை. அத்துடன் ஐந்து பொருட்கள் மட்டுமே பயன்படும், அளவும் மாறுபடும். பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை உருவாக்கலாம்.
ராதாகிருஷ்ணன் தொடர்புக்கு: 99659 72332
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval