Sunday, April 10, 2016

சட்டையை பிடித்து இழுத்த காவலர்... தடுமாறி கீழே விழுந்த பெண் பலியான சோகம்!

போக்குவரத்து காவல்துறையினர்,  'சோதனை'  என்ற பெயரில் இரு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தியபோது வாகனத்தில் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாநகர், களரம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகியோர் ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணி புரிபவர்கள். இன்று காலை வழக்கம் போல, இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி இருவரும் சீலநாயக்கன்பட்டி வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துறையினர்,  திடீரென நாகராஜனின் இரு சக்கர வாகனத்தை மறித்துள்ளனர்.

நாகராஜன், தனது வாகனத்தை சற்று தள்ளி நிறுத்த முயற்சித்தபோது, போக்குவரத்து காவலர் பெரியதம்பி, திடீரென நாகராஜனின் சட்டை காலரை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதில் நாகராஜன் நிலை தடுமாறியபோது வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி சுசீலா தவறி கீழே விழுந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சுசீலாவின் மீது ஏறியிருக்கிறது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுசீலா உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், விபரத்தை அறிந்து சம்பவ நடந்த இடத்திற்கு வந்த சுசீலாவின் உறவினர்களும் காவல்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மக்களின் ஆவேசத்தை கண்ட போக்குவரத்து காவலர் பெரியதம்பி, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனிடையே தம்பதியை வழிமறித்து நிறுத்தியதாக கூறப்படும் போக்குவரத்து காவலர் பெரியதம்பி,  இது போன்று வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளுவதாக குற்றம் சாட்டி,  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி,  மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் செல்வராஜ், பொதுமக்களையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தி, சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval