" அடிக்காதீங்க டீச்சர் " என்ற சிறுவனின் அழுகை சத்தம் உணர்வுகளற்ற
அந்த வகுப்பறை சுவர்களை கூட அழுகையில் ஆழ்த்தியது.
'மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்'
என்ற மா நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) கூற்றை ,
சின்னஞ் சிறு சிந்தையில் உதித்ததை
உடனே செய்து விட்டான் அந்த சிறுவன்.
பெரிதாக அவன் ஒன்றும் செய்து விடவில்லை.
தனது நண்பண் ஒருவனின் காலை உணவை அனுமதியின்றி சாப்பிட்டு விட்டான்.
ஆசிரியையின் அடி தாங்க முடியாத அந்தப் பிஞ்சு உள்ளம் என்னதான் செய்ய? கதறியது.
"என்ன மன்னிச்சிடுங்க டீச்சர்",
"என்ன மன்னிச்சிடுங்க டீச்சர்"
மன்னிக்கனுமா? செய்வதெல்லாம் செய்துவிட்டு உனக்கு இப்ப மன்னிப்பு வேறயா?"
என்று அதட்டிய ஆசிரியை,
"உன்னை மன்னிக்க வேண்டுமா?
"முடியுமென்றால் எனக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு கைப் பிடி மண் எடுத்துவா. நான் உன்னை மன்னிக்கிறேன்." என்று ஏளனமாக வேறு கூறி,
அந்தப் பிஞ்சு மனத்தின் மன்னிப்பிற்கு மறுப்புரை சமர்ப்பித்தாள்.
அடுத்த நாள் காலையில் சூரியன் கூட கண்ணீர் வடிக்க,
அந்தச் சிறுவன் ஓர் கைப்பிடி மண்ணுடன் வகுப்பறைக்குள் நுழைகிறான்.
ஆசிரியையிடம் சென்று தன் இளம் கரங்களை நீட்டுகிறான்.
இதனைக் கண்டதும் சுட்ட நீரில் சுண்ணாம்பு பட்டது போல
ஆசிரியைக்கு கோபம் பொங்கி எழுந்தது.
"என்னடா நக்கலா பண்ணுகிறாய்?
தப்பு செஞ்சது போதாம இது வேறயா?" என்று கொதித்தாள் அந்த ஆசிரியை.
"இல்ல டீச்சர்,
என்ட அம்மாவின் கப்ரடி( கல்லரை) மண்தான் இது."
''தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது'
என்ற ஹதீஸை
நீங்கதானே டீச்சர் சொல்லித் தந்தீங்க"
என்று தன் மெல்லிய குரலால் கூறினான்,
அந்தச் சிறுவன்.
செய்வதறியாத அந்த ஆசிரியை,
அவனை இறுக்கி அணைத்து முத்த மழைகளை அவன் மீது பொழிந்தாள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval