Wednesday, January 20, 2016

பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

r2
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் இன்று காலை 9.31 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக,  ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அந்த வகையில் ஏற்கனவே 4 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ என்ற 5-வது செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் இன்று (20.01.16) காலை 9.31 மணிக்கு,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதற்கான 48 மணிநேர ‘கவுன்ட் டவுன்’ கடந்த 18-ம் தேதி காலை 9.31 மணிக்கு தொடங்கியது.
இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ செயற்கைகோள், கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதன் மூலம் 1,500 கி.மீ. சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும், தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோள், முழுவதும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைகோள் நிலைநிறுத்தப்படும். இதேபோல் இன்னும் 2 செயற்கைகோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval