Saturday, January 9, 2016

அளவான உணவு ஆரோக்கிய வாழ்வு

pritikin-diet.jpg.pagespeed.ce.xgiAzjRY2G
ஒவ்வொரு உயிரினத்திற்கும் இன்றியமை யாதது உணவும் நீரும்தான்.
நல்ல உணவும், தூய்மையான நீரும் ஆரோக்கியத்தின் அருமருந்தாகும். ஆதி மனிதன் இலை, தழை, பழங்களை உண்டு வந்தான். அடுத்து அவற்றை வேகவைத்து உண்டான். நாகரீகம் வளர வளர உணவு என்பது நாவின் சுவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது.
இன்று உணவு சமைக்க நேரமில்லாமல் அவசர உணவு என்ற விஷ உணவையே சாப்பிட்டு வருகிறோம்.
ஒரு பக்கம் மரபணு மாற்றம் என்னும் பெயரில் இயற்கை முறையை அழித்து செயற்கை முறையை பின்பற்றி உணவுப் பொருள் உற்பத்தி செய்து வருகின்றனர். அந்த செயற்கை பொருட்களை பதப்படுத்தி பயன்படுத்தும் நிலைமைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம்.
வரும் காலங்களில் மாத்திரைகள் மூலம் பசியைப் போக்கிக் கொள்ளும் நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறான்.
காலையில் சிற்றுண்டி, மதியம் முழு உணவு, இரவு மிதமான சிற்றுண்டி என்னும் வகையில் சாப்பிட்டு வருகிறான்.
நம் முன்னோர்கள் காலையில் நீராகாரம் (தெளிநீர்) குடித்துவிட்டு வயல்வேலைக்கு சென்றனர். மதிய வேளையில் சாப்பாடு சாப்பிட்டனர். இரவு உணவை இருட்டும் முன்பே உண்டு உறங்கினர்.
இவர்களுக்கு உழைப்பும் உணவும் சீராக இருந்ததால் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால் இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்த்தால்….
உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. மூளைக்கே அதிக வேலை கொடுக்கப்படுகிறது.
உண்ணும் உணவுகள் எல்லாமே அவசரகதி உணவுகள், எளிதில் செரிமானம் ஆகாத உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள். நொறுக்கு தீனிகள், ரசாயனம் கலந்த குளிர்பானங்கள்.
இவற்றை வயிறு புடைக்க உண்பது, அதோடு மது, புகை போன்ற போதை வஸ்துக்களை பயன் படுத்துவது, என மனிதன் தன் ஆயுளை குறைத்துக் கொண்டே வருகிறான்
ஆனால் சுகாதார ஆய்வேடு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது. மனிதன் சராசரி ஆயுள் காலம் 60ல் இருந்து 68ஆக உயர்ந்துள்ளதாக கூறுகிறது. அது உண்மைதான். 68 வயது வரை அவன் ஆரோக்கியமாக வாழ்ந்தானா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். நாற்பதிலிருந்து மாத்திரையும், கையுமாக அலையும் மனிதர்கள்தான் அதிகம். இவர்கள் வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற பழமொழி போல் உள்ளது.
4 பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி. 10 பேரில் ஒருவர் இரத்த அழுத்த நோயாளி. 100 பேரில் ஒருவர் சிறுநீரக நோயாளி என நோய்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு மனிதனை ஆட்டிப்படைக்கிறது.
இப்படி வாழும் மனிதனின் ஆயுட்காலம் எப்படி சிறப்பானதாகும்.
உணவை மருந்தாகக் கொண்டு வாழ்பவர்களே நோயற்ற பெருவாழ்வு வாழ்வார்கள் என்கின்றனர் நம் முன்னோர்கள்.
அளவான இயற்கை உணவு, சீரான உடல் உழைப்பு இவையே ஆரோக்கியத்தைக் கொடுக்கக் கூடியவை. அதுபோல் நேரம் தவறாமல் உணவு உண்ணுதல், பசித்தபின் உணவருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களும் ஆரோக்கியத்தைத் தரும்.
உணவின் மூலமே நோய்கள் ஏதும் அணுகாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் அறிவியலார்கள்.
ஆம். நம் முன்னோர்களின் கூற்றுப்படி, 1 பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு காற்று என பிரித்து சாப்பிட்டால் நோய்கள் ஏதும் அணுகாது என்கின்றனர்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்பது வள்ளுவரின் வாக்கு.
ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்ததை தெளிவாக அறிந்துகொண்டு மறுபடி உணவு உண்டால் அவனுக்கு மருந்தே தேவையில்லை என்கிறார்.
அதிக உணவு ஆயுளைக் குறைக்கும்.
அதாவது அதிக உணவு உடலில் கொழுப்பை ஏற்படுத்தி உடல் பருமன் அடைவதுடன், உடலில் பல நோய்களுக்குக் காரணம்.
சத்தான உணவு என்று டானிக், வைட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் நீண்ட நாள் வாழ முடியாது.. பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது.
இதைப்பற்றி அண்மையில் விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்ததில், குறைந்த அளவு உணவு உண்ட விலங்குகளின் ஆயுட்காலம் 20 முதல் 80 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
இதுபோல் ஒத்த வயதுடைய பல்கலைக்கழக மாணவர்களை இருபிரிவாக பிரித்து ஒரு பிரிவினர்க்கு அதிகமான கொழுப்பு மிகுந்த உணவும், இரண்டாவது பிரிவினர்க்கு குறைந்த அளவு உணவும் கொடுக்கப்பட்டது.
அதிக அளவு உணவு உண்டவர்கள் எளிதில் உடல் பருமன் அடைந்தனர். மேலும் உடல் புத்துணர்வு இல்லாமல் சோர்ந்து காணப்பட்டனர். படிப்பிலும் கவனம் குறைந்தது. சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கினார். மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுபோன்ற பிரச்சனைக்கு ஆளாகினர். ஆனால் குறைந்த அளவு உணவு சாப்பிட்டவர்கள் நல்ல திடத்துடனும், புத்துணர்வுடனும் இருந்தார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்திருந்தது. படிப்பில் நன்கு கவனம் செலுத்தினர்.
எனவே அளவான உணவே ஆரோக்கியத்திற்கு நல்லது. எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பதும், பசித்த பின் உண்பதும், உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதும் நீண்ட ஆரோக்கியத்தைத் தரும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval