Wednesday, January 20, 2016

பாதுகாப்பு அம்சம் இல்லாமல் அச்சிட்ட ரூ.1,000 நோட்டு : ரூ.30,000 கோடி நோட்டுகள் செல்லாது

Daily_News_7971264123917
பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடுகளுடன் ரூ.30,000 கோடிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்ேவறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கள்ள நோட்டு புழக்கம் குறைந்தபாடில்லை. இந்திய பொருளாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து புழக்கத்தில் விடப்படுகின்றன. எனவே, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டு வெளியிட்டு வருகிறது ரிசர்வ் வங்கி.
பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக, சில்வர் நிறத்தில் பாதுகாப்பு இழை ரூபாய் நோட்டுக்களில் இருக்கும். ஆனால், சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் இந்த பாதுகாப்பு இழை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 5ஏஜி, 3ஏபி வரிசை எண்ணில் அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் சில்வர் இழை இடம்பெறவில்லை. ஆனால் இவை எந்த அளவு புழக்கத்தில் உள்ளன என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.1,000 நோட்டு இவ்வாறு தவறுதலாக அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத்தில் உள்ள அச்சகத்தில் இவை அச்சிடப்பட்டு, பின்னர், நாசிக்கில் உள் அச்சகத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ரூபாய் நோட்டு அச்சக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அம்சம் இல்லாத ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, எல் எழுத்துடன் 5ஏஜி, 3ஏபி வரிசை எண் கொண்ட சில ரூ.1,000 நோட்டில் பாதுகாப்பு இழை இல்லை. எனவே, இவற்றில் புழக்கத்தில் உள்ள நோட்டை திரும்ப பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வரிசை எண் நோட்டு இருந்தால் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.
கள்ளநோட்டுக்களை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வரிசை எண்கள் ஏறுமுகமாக இருக்கும் விதத்தில் ரூபாய் நோட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரிசை எண்கள் இடமிருந்து வலமாக ஏறுமுகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், முன் இணைப்பாக உள்ள முதல் மூன்று எண், எழுத்துக்கள் ஒரே வடிவில் உள்ளன. இதுபோல், பாதுகாப்பு அம்ச குறைபாட்டை கருத்தில் கொண்டு 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டு திரும்பப்பெறப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி நோட்டிலேயே பாதுகாப்பு அம்சம் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அச்சகம் உட்பட பல தரப்பிலும் உயர்மட்ட விசாரணை நடைபெற உள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டுபிடிக்க எளிய வழி
ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில் சில்வர் நிற பாதுகாப்பு இழை, நீர் குறியீடு என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகவே ரூபாய் நோட்டுக்கள் பிரத்யேகமான காகிதத்தில் தயாராவதால், அதன் தரத்தை தொட்டுப்பார்த்து உணரலாம். புற ஊதா விளக்கொளியில் ஜொலிக்கும் மையினால் நோட்டு அச்சிடப்பட்டிருக்கும். தற்போது அச்சடிக்கப்பட்ட ரூ.1000 நோட்டு மேற்கண்ட விதத்தில் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் சில்வர் நிற பாதுகாப்பு இழை மட்டும் தவறுதலாக விடுபட்டிருக்கும்.
போலியை தடுக்கும் பாதுகாப்பு இழை
ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்களில் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட சில்வர் நிற பாதுகாப்பு இழை இருக்கும். ரூ.100, ரூ.500 நோட்டில் இந்த பாதுகாப்பு இழை பாதி வெளியில் தெரிவதாகவும், பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் இருக்கும். ரூ.1,000 நோட்டு தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’என தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘ஆர்பிஐ’ எனவும் மாறி மாறி அச்சிடப்பட்டிருக்கும். ரூ.1,000 பணத்தாளில் உள்ள இந்த பாதுகாப்பு இழையில் ‘பாரத்’ என தேவநாகரி எழுத்திலும், ‘1000’, ‘ஆர்பிஐ’ என்பனவும் இருக்கும். மகாத்மா காந்தி வரிசை தாள்களில் இந்த அம்சம் காணப்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval