Sunday, January 10, 2016

!'படித்ததில் பிடித்தது

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன்.
எனக்கு வேலை கிடைத்த புதிதில், நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய். அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.
அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை! வீட்டிற்கு போன் செய்தேன்.... அப்பா தான் எடுத்தார்.
அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு,
"உங்களுக்கு எதாச்சும் வேணுமா?"
அப்பா பதில் சொல்லவில்லை. "அம்மாட்ட பேசு.. "என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார்.
நானும் அம்மாவிடம், "பாத்தியா...?! நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல..... இவரெல்லாம்....." என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு, மற்ற கதைகளை, அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும்.... எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா...! பேசிவிட்டு போனை வைத்துவிட்டேன்.
ஓரிரு நாட்கள் கழித்து, என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன். அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இருந்து நான் பயன்படுத்துவது. என் அப்பா என் செலவுக்காக என்று அதில் தான் பணம் போடுவார்.
பணியில் சேர்ந்த தகவலும்,சம்பள விவகாரங்களும் அப்பாவிற்கும் தெரியும்! அதனால் இனி மாதச் செலவுக்காக அதில் பணம் போடமாட்டார் என நினைத்திருந்தேன். அதோடு இனி அப்பா காசு நமக்கெதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக்கொண்டதால்.... அந்த வங்கிக் கணக்கைப் பார்க்கவில்லை.
முதல் மாதச் சம்பளம் வாங்கி..., அது தீரும் நிலை வந்து.... பழைய அக்கவுன்டில் ஏதாவது இருக்கிறதா என்று அக்கவுன்டைப் பார்த்தால்........
அதில் வழக்கம் போல, அந்த மாதமும் 30 ஆம் தேதியே ஐயாயிரம் ரூபாய் போட்டிருந்தார் அப்பா!!. அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது!
அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம் போலவே, தீபாவளிக்கும், பொங்கலுக்கும், என் பிறந்தநாளுக்கும்..... நான் வீட்டிற்கு வரும் முன்னமே துணிமணிகள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.
'அப்பா மாறவேயில்லை!!'

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval