Sunday, January 24, 2016

சீட் மாறி அமர்ந்ததில் தகராறு : 70 பயணிகளை இறக்கி விட்டு சென்றது விமானம்

Daily_News_7475811243058
ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் குழுவாக வந்த 70 பயணிகள் இருக்கைகளில் இஷ்டத்துக்கு அமர்ந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். ஐதராபாத் ராஜிவ்காந்தி விமானநிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், செல்வதற்காக இன்டிகோ விமானம் தயாராக இருந்தது. அதில் ஒரே குழுவாக டிக்கெட் எடுத்திருந்த 70 பயணிகள் ஏறினர்.
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல், இஷ்டத்துக்கு இருக்கையை மாற்றிக் கொண்டனர். அவரவருக்கு ஒதுக்கிய சீட்டில் அமரும்படி விமான ஊழியர்கள் கூறினர். ஆனால் குழுவாக வந்திருந்த 70 பயணிகள் கேட்காமல் விமான ஊழியர்களுடன் தகராறு செய்தனர். ஒருவர் தனது பையால் விமான ஊழியரை தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து உடனடியாக விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசாருடன் வந்து, குழுவாக ஏறிய 70 பயணிகளையும் விமானத்தை விட்டு இறக்கினர்.
அதன்பின் அந்த விமானம் ராய்ப்பூர் புறப்பட்டு சென்றது. ஆனால் சோதனையை முடித்து விமானத்தில் ஏற்றப்பட்ட அவர்களின் லக்கேஜ்கள் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை. இது குறித்து விமானநிலைய போலீசாரிடம் குழுவாக வந்திருந்த 70 பயணிகள் புகார் செய்தனர். அதில், விமானத்தின் ஊழியர்களால் தாங்கள்  அலைக்கழிக்கப்பட்டதாகவும், தங்களது உடமைகளை ஒப்படைக்காமல் விமானம்  புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இன்டிகோ நிறுவனம் விடுத்துள்ள செய்தியில், ‘‘முறைகேடாக நடந்து கொண்டதால், 70 பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமான பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு பயணிகளை, நிலைய ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து கூச்சலிட்டதோடு விமான பணியாளர்களை அவர்கள் மிரட்டி தாக்க முயன்றனர். அவர்களை இறக்கிவிடும்படி  மற்ற பயணிகளும் கூறியதால், குழுவாக வந்த 70 பேரையும் இறக்கிவிட்டோம்.’’ என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval